ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை மீள அமைக்க TNA ஆதரவு


அக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் 14 பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதமொன்று ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. ஐக்கிய தேசிய முன்னணியினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் பெரும்பான்மையை பெறக்கூடியவர் என ஜனாதிபதி கருதும் நபரை பிரதமராக நியமிக்க வேண்டுமெனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அக்டோபர் 26 ஆம் திகதியில் பின்னர் பாராளுமன்றம் பல தடவைகள் கூடிய போதிலும், பிரதமராக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியவில்லை என கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பிரதமராக நியமிக்கப்பட்ட குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு எதிராக நவம்பர் 14 மற்றும் 16 ஆம் திகதிகளில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், இதனால் நாட்டில் பிரதமரோ, அமைச்சரவையோ, சட்டபூர்வமாக நியமிக்கப்பட்ட அரசாங்கமோ இருக்கின்றதா என்ற முரண்பாட்டைத் தோற்றுவித்துள்ளதாகவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

அத்துடன் குரல் அடிப்படையில் எடுக்கப்பட்ட வாக்குகள் 122 உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

ஆகவே இந்த நிலை தொடர்ந்தும் நீடிக்க முடியாது எனவும், பாராளுமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில், ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தினை மீள அமைப்பதற்கு தாம் ஆதரவு தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *