TNA மஹிந்தவிற்கு எதிராக வாக்களிக்க முடிவு


அரசியலமைப்பை முற்றிலும் மீறும் வகையில் பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ தலைமையிலான அரசாங்கத்திற்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவளிக்க தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி பிரதமரை நீக்குவதாகவும், பிரதமரை நியமிப்பதாகவும் பிரகடனப்படுத்தி ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அரசியலமைப்பிற்கு முரணான சட்டவிரோத செயல் எனவும், பாராளுமன்ற அமர்வு இடைநிறுத்தப்பட்டதாக ஜனாதிபதி விடுத்த பிரகடனத்தை ஜனநாயக விரோத செயலாகவும் நோக்குவதாகவும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அத்துடன் பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாத ஒருவரை பிரதமராக நியமித்து, அவருடைய பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவையை தாமதிப்பதற்கும், முறியடிப்பதற்கும் ஏதுவான காரணியாகவே இதனை கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கட்சி தலைவர்களுக்கு இடையில் நேற்று மாலை நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தின் போது இந்த தீன்மானங்கள் எடுக்கப்பட்டதாக கூட்டமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த கால நீடிப்பை பயன்படுத்தி அமைச்சு பதவிகளையும், பணத்தையும் இலஞ்சமாக வழங்கி பாராளுமன்ற உறுப்பினர்களை தமது பக்கத்திற்கு இழுத்தெடுத்து, பெரும்பான்மையை கபடமாக பெற்றுக்கொள்ள முன்னெடுக்கப்படும் செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் இந்த சதி முயற்சிக்கு பலியானதை கடுமையாக கண்டிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − 8 =