இறப்புத் தொடர்பான கள்ளிமேட்டுக் கல்வெட்டு: Dr.த.ஜீவராஜ்


 

சில செய்திகள் என்றும் அழியாமல் இருக்கவேண்டும் என பண்டைய  மக்கள் விரும்பினார்கள். அதனால், அவற்றைப் பல பொருட்கள் மீது எழுதி வைத்தார்கள். அவற்றில் கல்லும் ஒன்று. அவ்வாறு நீண்ட காலம் அழியாதிருக்க வேண்டும் என கல்லில் பொறிக்கப்பட்ட செய்தியே கல்வெட்டு எனப்படுகின்றது. கல்வெட்டுக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நிலைத்திருக்கக் கூடியவை என்பதனால், மிகப்பழங்கால வரலாற்றுச் செய்திகள் மற்றும் நிகழ்வுகளுக்கான நம்பகரமான சான்றாதாரங்களாக அவை திகழ்கின்றன.

கல்வெட்டுச் செய்திகள் முதலில் ஓலையில் எழுதப்பட்டிருக்கும்  பின்னர் அதனை எழுதவேண்டிய கல்லின் மீது ஓவியம்போல் வரைவார்கள். இதனைத்தொடர்ந்து அதன்மீது கூர்மையான உளி போன்ற கருவியால் வெட்டுவார்கள். வெட்டிய எழுத்துகள் கல்லில் சிறிது பள்ளமாகத் தோன்றும். இவை கல்லில் வெட்டப்பட்ட எழுத்துக்கள் என்பதனால் கல்வெட்டுகள் என்றழைக்கப்படுகின்றன. கல்வெட்டைச்  சிலாசாசனம் (சிலை + சாசனம் ஸ்ரீ சிலாசாசனம்) எனவும் கூறுவர். இங்கு சிலை என்ற சொல் கல்லைக் குறிப்பதாயும், சாசனம் என்ற சொல் அறிவிக்கும் செய்தி அல்லது உத்தரவு எனப்பொருள்படுவதாயும் அமைந்திருக்கும்.

கல்வெட்டுக்கள் பெரும்பாலும் பொதுமக்கள் பார்ப்பதற்காக வெட்டப்படுவதால் கோயில்கள், பொது மண்டபங்கள் போன்ற இடங்களில் வெற்றித்தூண்கள், நடுகற்கள், தானசாசனங்களாகக் காணப்படுகின்றன. குகைகளில் தங்கியிருந்த துறவிகளுக்கு அரசர்களும், வணிகர்களும் அளித்த தானம் பற்றிய செய்திகளைத் தெரிவிக்கும் குகைக்கல்வெட்டுக்களும் உண்டு.

உலகில் இன்றுவரை கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகளில் அதிகமான கல்வெட்டுகளைக் கொண்ட மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் திருகோணமலையில் பெரும்தொகையான தமிழ்ச் சாசனங்கள் இதுவரை கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்தவை போல் பலமடங்குச் சாசனங்கள் இன்னும் கண்டறியப்படாமல் இருப்பது பற்றிய தகவல்கள் அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவருகிறது.

பண்டைய காலத்தினைப்போலவே 20 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த நவீனயுகமக்களும் சில முக்கிய செய்திகளைப் பதிவு செய்ய கல்வெட்டுக்களைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதனை ஆதாரப்படுத்தும் ஆவணங்கள் சில அண்மையில் திருகோணமலையில் காணக்கிடைத்தன. அவற்றில் ஒன்று மூதூரில் உள்ள பட்டித்திடல் ஸ்ரீP சித்தி விநாயகர் ஆலயத்தியத்தின் வாசலில் உள்ள கற்தூண். அது 21.09.1976 ஆம் ஆண்டு இடம்பெற்ற  அவ்வாலய கும்பாவிஷேக நிகழ்வினைப் பதிவு செய்திருக்கிறது. கடுமையான  யுத்தம், பலமுறை இடம்பெற்ற இடப்பெயர்வுகள்  என்பனவற்றையெல்லாம் தாண்டி 1976 ஆம் ஆண்டு கும்பாவிஷேகச் செய்தி இக்கல்வெட்டு மூலம் இன்றும் நமக்குக் அறியக்கிடைக்கிறது.

இக்கல்வெட்டினைப் பார்வையிட்ட பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்கள் 1976 காலப்பகுதியில் வாழ்ந்த மூதூர் பட்டித்திடல் மக்கள் தங்கள் ஆலய நிகழ்வுகளைப் பண்டைய நாட்களைப்போல கல்வெட்டுக்களாகப் பொறிக்கும் ஆர்வம் கொண்டிருந்தார்கள் என்பதனை இதன் மூலம் அறியக்கூடியதாக உள்ளது என்றார். நவீனயுகக் கல்வெட்டுக்கள் தொடர்பான ஆர்வம் மிகுந்திருந்த காலப்பகுதியிலேயே  கள்ளிமேட்டுக் கல்வெட்டு தொடர்பான தகவல் கிடைத்தது. ‘தம்பலகாமம் கள்ளிமேட்டில் ஒரு கல்வெட்டு இருப்பதாக தகவல் கிடைத்தது உடனே வா’ அன்ற அப்பாவின் பரபரப்பான அழைப்பு திருகோணமலை நகரில் இருந்து என்னை அவசரமாக பயணிக்க வைத்தது.

எனது தந்தை கலாபூசணம்.வே.தங்கராசா, அவருக்கு கல்வெட்டுப் பற்றிய தகவல் தந்திருந்த  வயலூர்ப் புலவன் எனும் புனைப்பெயருடைய கவிஞர் திரு.மா.புவேந்திரராசா  ஆகியோருடன்  கள்ளிமேடு நோக்கிப் பயணித்தேன். கள்ளிமேடு ஒரு சிற்றூர். தம்பலகாமத்தின் புகழ்பூத்த பல கலைஞர்களும், அண்ணாவிமார்களும், சுதேச வைத்திர்களும் கள்ளிமேட்டினைப் பிறப்பிடமாகக் கொண்டவர்கள். பண்டைய நாட்களில் கள்ளிமேட்டிலுள்ள வேள்வி வளாகத்தில் வருடந்தோறும் கண்ணகியம்மன் விழா மிகச்சிறப்பாக நடைபெற்றிருக்கிறது. கண்ணகி கோவலன் விழாவாக நடைபெறும் இவ்வேள்வி தம்பலகாமம் ஆதிகோணநாயகர் வெளிச்சுற்று வழிபாடுகளில் முக்கியம் பெற்ற ஒன்றாகவும் இருந்தது.

நாங்கள் தேடிச் சென்ற கல்வெட்டு கள்ளிமேட்டு வேள்வி வளாகத்திலிருந்து சிறிது தூரத்திலுள்ள வீட்டின் வளவொன்றில் காணக்கிடைத்தது. வீட்டின் தற்போதைய உரிமையாளரான பெண்மணி அதனை ‘ஐய்யனார் சுவாமி கல்’ என அடையாளப்படுத்தினார். அவர் கூறியது போல் கல்லின் அடிப்பாகத்தில் சில எழுத்துக்கள் தென்பட்டாலும் கல்லின் ஏனைய பகுதிகளனைத்தும் சேற்றுமண் நிறைந்து காணப்பட்டது. கல்லினை நன்றாக நீரூற்றி தென்னந்தும்பினால் தேய்த்துக் கழுவியபோது எழுத்துக்கள் துல்லியமாகத் தெரியத் தொடங்கின. அருகில் இருந்த கடையில் கோதுமைமா வாங்கி கல்லின் மேல் பூசிய பின்னர் எளிதில் யாவரும் வாசிக்கும் வண்ணம் எழுத்துக்கள் வெளிப்பட்டன.

கல்லின் மேற்பகுதி பரவளைவானது. கல் 50 ஊஅ உயரமும், 40 ஊஅ அகலமும் உடையது. கல்லின் நிலத்தில் நிறுத்தப்பட்ட அடிப்பகுதி நிலத்திற்கு மேல் 20 ஊஅ உயரமுடையது. அது ஒரு இறப்புத் தொடர்பான கல்வெட்டு. அதில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் வருமாறு:

  1. நள வருடம் தை.மீ.உ.(ங)   –  (பரவளைவாக எழுதப்பட்டது)
  2. காராள குல
  3. கந்தப்பர் மகன்
  4. கணபதிப்பி(ள்ளை)
  5. தேகவியோகம்
  6. தம். கள்ளிமேடு
  7. மகன்
  8. க.ஐயாத்துரை

இக்கல்வெட்டு கந்தப்பர் கணபதிப்பிள்ளை அவர்களின் இறப்பினைப் பதிவு செய்கிறது. குறித்த நபர் பற்றிய தகவல்கள் தற்போதைய குடியிருப்பாளருக்கு தெரியாத போதும் இக்கல்லினை வீட்டின் முன்னைய உரிமையாளரான திரு.கந்தையா கிருபானந்தன் அவர்கள் வணங்கிச் செல்வதாக ஒரு முக்கிய தகவலினைத் தந்தார் அவர்.

திருகோணமலையில் தற்போது வசித்துவரும் இளைப்பாறிய கிராமசேவையாளரும், சிற்பக்கலைஞரும், நாடக நடிகருமான திரு.க. கிருபானந்தன் அவர்களைத் தொடர்பு கொண்டு இந்த நடுகல் அவரது பரம்பரைக்குச் சொந்தமானது என்பதனை உறுதிசெய்ய முடிந்தது. எனினும் மேலும் விபரங்களைத் தெரிந்து கொள்ள வைராவியார் குடும்பத்தைச் சேர்ந்த திரு.தெய்வேந்திரம் துரைநாயகம் அவர்களை எனது தந்தையின் உதவியுடன் அணுகினேன்.

அவர் தந்த தகவல்களின் அடிப்படையில் திரு.க. கிருபானந்தன் அவர்களின் தந்தையின் பெயர் கந்தையா விதானையார். கந்தையா விதானையாரின் தந்தை ஐயாத்துரை. ஐயாத்துரை அவர்களின் தந்தை  கணபதிப்பிள்ளை.  கணபதிப்பிள்ளை அவர்களின் தந்தை கந்தப்பர். இவ்வாறாக நடுகல்லில் குறிக்கப்பட்ட அமரர் கந்தப்பர் கணபதிப்பிள்ளை அவர்களை இனங்காண முடிந்தது.

கந்தப்பர் கணபதிப்பிள்ளை அவர்களின் காலம் கி.பி 1860 முதல் 1920 வரை இருக்கலாமென பலரது வாய்மொழித் தரவுகள் மூலம் அனுமானிக்க முடிந்தது. அதாவது இற்றைக்கு சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்னர் கள்ளிமேட்டில் கணபதிப்பிள்ளை அவர்கள் வாழ்ந்திருக்கின்றார். விதானையாளராகக் கடமையாற்றிய அவர் கல்வியறிவில் சிறந்து விளங்கியவராக இருந்ததை அறியமுடிகின்றது. அவரிடம் நிகண்டு முதலான பல அரிய ஓலைச்சுவடிகள் இருந்ததாகச் சொல்கின்றார்கள். அவரது மரணம் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அண்ணளவாக 1910 – 1920 காலப்பகுதியில் நிகழ்ந்திருக்கிறது. எனவே இறப்புத் தொடர்பான இக்கல்வெட்டு இன்றைக்குச் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் நிறுவப்பட்டிருக்க வேண்டும் எனபதனை உறுதிப்படுத்த முடிகிறது.

கணபதிப்பிள்ளை அமரத்துவம் அடைந்தபோது அவரது நினைவாக ஐயாத்துரை அவர்களால் உருவாக்கப்பட்ட இக்கல்வெட்டு ஊருக்கு வெளியே இருக்கும் ஐயனார் தீவில் அவர்களுக்குச் சொந்தமான காணியில் நிறுவப்பட்டிருக்கின்றது. பின்னர் திரு.கிருபானந்தன் அவர்களின் தந்தையாரினால் மாட்டுவண்டியின் உதவியுடன் இக்கல்வெட்டு கள்ளிமேட்டிற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறது.  இறப்புத் தொடர்பான இக்கல்வெட்டு அமரர் கணபதிப்பிள்ளை  தொடர்பான விபரங்களைத் தருவதோடு சில வரலாற்றுச் செய்திகளையும் நமக்கு அறியத்தருவதாக இருக்கிறது. இந்த அடிப்படைகளின் கீழ் தம்பலகாமம் கள்ளிமேட்டு  கல்வெட்டுச் சொல்லும் வரலாற்றினை சற்று விரிவாகப் பார்ப்பது அவசியமாகிறது.

கல்வெட்டின் மேற்பகுதிக்கு ஏற்றவாறு முதல்வரி பரவளைவாக எழுதப்பட்டுள்ளது. அது கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் நபர் இறந்த தினத்தினைப் பதிவு செய்கின்றது. நளவருடம்.தை.மீ.உ(ங) என்ற முதல்வரி குறிப்பில், நள வருடம் ஆண்டைக் குறிக்கின்றது. இந்துக்களின் ஆண்டுமுறையில் 60 வருடங்கள் ஒரு வட்டமாகக் கருதப்படுகின்றது. அதில் வரும் 50வது வருடம் நள வருடமாகும். சித்திரை முதல் நாளை புதிய ஆண்டின் தொடக்கமாகக் கொண்ட இந்த ஆண்டுமுறைப்படி நள வருடம் 60 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும்.

ஆங்கில வருட முறைப்படி இனி நளவருடம் (2036 – 2037) ஆம் ஆண்டில் வரும். எனவே நளவருடம் இதற்கு முன்பாக 1976-1977, 1916-1917, 1856-1857 என்ற ஒழுங்கில் வந்திருக்கும். ஏலவே நாம் பார்த்திருந்தபடி இறந்தவரின் குடும்ப வரலாற்றனை அடிப்படையாகக் கொண்டு இக்கல்வெட்டு இன்றைக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் எழுதப்பட்டிருக்கலாம் எனக் கணித்திருந்தோம். அந்த அடிப்படையில் இங்கு குறிப்பிடப்படும் நளவருடம் 1916  –  1917 ஆண்டுக்குரியது எனபதனை உறுதி செய்யலாம். அடுத்துவரும் சொற்களான தை.மீ.உ(ங) என்பது இந்துக்களின் ஆண்டு முறைப்படி எழுதப்பட்டிருந்தால் நள வருடம் தை மாதம் 23 ஆம் திகதியாக ( உ- 2, ங – 3 தமிழ் எண் முறைப்படி) இருக்கும்.

நடுகல்லின் இரண்டாவது வரி இறந்தவரின் குலத்தினைச் சாதிரீதியாகக் குறிப்பிடுகிறது. ‘காராளர் குல’ என்ற சொற்றொடரில் காராளர் எனக்குறிக்கப்படுவது சாதீய அமைப்பில் வேளாண்மைத் தொழில் செய்து வந்தவர்களைக் குறிக்கும் பெயராகும். காராளர் என்பதன் நேர்ப்பொருள் மேகத்தை அல்லது மழையை ஆள்பவர் என்பதே. காராளர் என்பது வேளாளர்களைக் குறிக்கும் பொதுப்பெயராகப் பயன்படுத்தப்பட்டாலும் தம்மைக் கார்காத்த வேளாளர் எனக் குறிப்பிட்டுக் கொள்ளும் பகுதியினரைக் குறிப்பதற்கு சிறப்பாகப் பயன்படுத்தப்படுகின்றது.

அடுத்துவரும் மூன்றாவது, நான்காவது வாசகங்கள் இறந்தவரின் விபரத்தினைத் தருகின்றது. கந்தப்பர், மகன். கணபதிப்பி(ள்ளை) என்ற சொற்றொடர் இறந்தவர் கந்தப்பர் கணபதிப்பிள்ளை என்பதனைக் குறிக்கின்றது. இங்கு இறந்தவரான கணபதிப்பிள்ளையின் பெயரில் ‘கணபதிப்பி’ என்ற பகுதி தெளிவாகத் தெரிகிறது. இலங்கையில் கிடைக்கப்பெற்ற இறப்புத் தொடர்பான கல்வெட்டுக்களில் பிள்ளை என்ற  சொல் ஆட்களின் இறுதிப்பெயராக வருமிடத்து அதனைச் சுருக்கி பி என்ற எழுத்தினை மட்டும் எழுதும் வழமை காணப்படுகிறது. யாழ்ப்பாணம் சங்கிலித் தோப்பிலே காணப்படும் மரணம் தொடர்பிலான கல்வெட்டுக்களை இதற்குதாரணமாகக் கொள்ளலாம். இங்கு பொறிக்கப்பட்டிருக்கும் தம்பையா பி(ள்ளை), சின்னாச்சிப் பி(ள்ளை), சிவப்பிரகாச பி(ள்ளை) ஆகியோரின் பெயர்கள் மேற்கண்டவாறே குறிக்கப்பட்டிருப்பதைக் கருத்தில் கொள்ளலாம்.

இக்கல்வெட்டில் எழுதப்பட்டுள்ள ஐந்தாவது வாசகம் “தேகவியோகம்”என்பதாகும்.  இது அவரது இறப்புச் செய்தியினைச் சொல்கிறது. “உடலில் இருந்து உயிர் நீங்கிச்  செல்லுதல்”  என்பதற்குரிய  வடமொழிச்சொல்  இதுவாகும். அந்நாட்களில் இப்பிரதேச எழுத்து வழக்கில் வடமொழி கொண்டிருந்த செல்வாக்கினை இது உணர்த்துவதாக இருக்கிறது. பரமபதம் அடைதல், தெய்வீகமடைதல்,  மரணமடைதல், தேகாந்தம் என்பன இந்நடுகல் எழுதப்பட்ட சமகாலத்தில் இலங்கைச் சாசன வழக்கில் இறப்பைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்ட செற்களாகும்.

அதனைத் தொடர்ந்து வரும் ஆறாவது வாசகமான “தம்.கள்ளிமேடு” இறப்பு இடம்பெற்ற இடத்தினைக் குறிக்கின்றது. தம்பலகாமத்தைச் சேர்ந்த கள்ளிமேடு என்பதனையே இது சுருக்கமாகச் சொல்கின்றது. இதன் மூலம் தம்பலகாமத்தில் இருந்த சிற்றூர்களை அடையாளப்படுத்தும் போது ‘தம்’ என்று அவற்றின் தாயூரான தம்பலகாமத்தை குறிக்கும் வழமை அக்காலத்தில் இருந்ததை இது உறுதிப்படுத்துகிறது.

இக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட வீடு, வயல், காணி உறுதிகளிலும், நீதிமன்ற வழக்குகள் தொடர்பான தமிழ் ஆவணங்களிலும்  ‘திரு.தம்.கந்தளாய், திரு.தம்.கிண்ணியா, திரு.தம்.ஆலங்கேணி’  போன்ற சொற்றொடர்களைக் காணலாம். அத்துடன் இன்று வழக்கொழிந்து போய்விட்ட  “புறோநோட்டு”  என்றழைக்கப்பட்ட கடன் பத்திரங்களிலும் இவ்வகையிலேயே தம்பலகாமப்பற்றின் கீழிருந்த சிற்றூர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டன.

இங்கு திரு.தம்.ஆலங்கேணி என்பது திருகோணமலையைச் சேர்ந்த தம்பலகாமத்திலுள்ள ஆலங்கேணி எனும் ஊர் எனப் பொருள்படும். ‘தம் கள்ளிமேடு’ என்ற பதம் இன்னொரு முக்கிய விடயத்தையும் சுட்டி நிற்கிறது. அதாவது இன்றைய நாட்களில் கல்வி மேடு என்று சிலர் குறிக்க முற்படும் இப்பிரதேசம் சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் ‘கள்ளி’ மேடு என்றே வழங்கப்பட்டிருக்கிறது என்பதனை இக்கல்வெட்டு ஆவணப்படுத்துகிறது.

இறுதியாக இக்கல்வெட்டினைப் பொறிக்கச் செய்தவர் பற்றிய தகவல் ஏழாம், எட்டாம் வரிகளில் இடம்பெற்றுள்ளது. அவர் இறந்தவரின் மகன். அவரது பெயர் க.ஐயாத்துரை என்பதாகும். தமிழ் இலக்கியத்தில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக அறியப்படும் ஐயாத்துரை அவர்களுக்குச் சொந்தமான திருமுகாற்றுப்படை முதலான ஓலைச்சுவடிகளை  இன்றும் காணக்கூடியதாக இருக்கிறது. ஐயாத்துரை அவர்களுக்கு தன் தந்தையின் இறப்புத் தொடர்பான கல்வெட்டு நாட்ட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுவதற்கு அவரது பரந்த இலக்கிய அறிவு காரணமாக இருந்தது என ஊகிக்கலாம். அவர் தன் தந்தைக்கு எடுத்த இக்கல்வெட்டு மூலம் சுமார் நூறுவருடங்களுக்கு முந்திய சில வரலாற்றுப் பதிவுகளை நமக்காக விட்டுச்சென்றுள்ளார்.

மேலதிக ஆராய்வுகளுக்கும், ஆவணப்படுத்தலுக்குமாக  இறப்புத் தொடர்பான தம்பலகாமம் கள்ளிமேட்டுக் கல்வெட்டு பற்றிய தகவல்கள் பேராசிரியர் சி.பத்மநாதன் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 –Dr..ஜீவராஜ் (MBBS, MCGP)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *