குழந்தைகள் ஓவரா டி.வி பார்க்கிறார்களா?


பெரும்பாலான வீடுகளில், டி.வி நிகழ்ச்சிகளைப் பெற்றோர்களுடன் சேர்ந்து குழந்தைகளும் பார்க்கிறார்கள்.

இது, குழந்தைகளின் உடல் மற்றும் மனநலனை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை விளக்குகிறனர் குழந்தைகள் மனநல மருத்துவர்கள்.

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகள் தொடர்ந்து டி.வி-யில் பார்க்கும் விஷயங்களுக்குப் பழக்கப்பட ஆரம்பிப்பார்கள். டி.வி பார்த்துக்கொண்டே சாப்பிடும் பழக்கத்துக்கும் சில குழந்தைகள் ஆளாவார்கள்.

இதனால், உடல் எடை அதிகரிக்கலாம். ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்வது போன்ற நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து பார்க்கும் குழந்தைகள் அதை நடைமுறையிலும் பின்பற்ற ஆரம்பிப்பார்கள்.

எதற்கெடுத்தாலும் பயப்படும் குழந்தைகளுக்கு பயம் இன்னும் அதிகரிக்கும்; பள்ளி செல்ல மறுப்பது, தனியாக ஓர் அறைக்குள் செல்ல மறுப்பது போன்றவற்றில் ஈடுபடுவார்கள். எனவே, மூன்று வயதுக்கு முன்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் குழந்தைகளுக்கு அறிமுகம் செய்வதைப் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.

குழந்தைகள் படிக்கும்போது அவர்களைத் தனியறையில் அடைத்துவிட்டு பெற்றோர்கள் தொலைக்காட்சி பார்க்கும் பட்சத்தில், குழந்தைகளின் முழு கவனமும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே இருக்கும்.

இதனால், அவர்களுக்குப் படிப்பின் மீது நாட்டம் குறையலாம். சிறு வயதிலேயே அழுகை, சந்தேகம், பொறாமை, கோபம், பழிவாங்கும் உணர்வுகளைத் தொலைக்காட்சியின் மூலம் உள்வாங்கும் குழந்தைகள் இப்படிப்பட்ட எதிர்மறை குணங்களுடனேயே வளர்வார்கள். மேலும், இந்த குணங்களை மற்றவர்களிடமும் அதிகமாக வெளிப்படுத்துவார்கள்.

வயதுக்கு மீறிய படங்கள், நிகழ்ச்சிகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு இளம் வயதிலேயே பாலுணர்வு சார்ந்த பிரச்சினைகள் ஏற்பட்டு, அவர்கள் தவறான பாதையில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது.

அதிகமாக விளம்பரங்களைப் பார்க்கும் குழந்தைகள், அவற்றில் வரும் பொருள்களுக்கு ஆசைப்படுவார்கள். இது நாளடைவில் அடம், பிடிவாதம் போன்ற குணங்களாக மாற வாய்ப்பிருக்கிறது.

குழந்தைகள் ஓவரா டி.வி பார்க்கிறார்களா? பெற்றோருக்கான ஆலோசனைகள்

மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்குப் பெற்றோர்கள் தொலைக்காட்சியை அறிமுகம் செய்யக் கூடாது.

மூன்று வயதுக்குப் பின்னர் குழந்தைகளின் அறிவை மெருகேற்றும் நிகழ்ச்சிகளைப் பார்க்க அனுமதிக்கலாம்.

குழந்தைகளை ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் எந்தக் காரணம் கொண்டும் டி.வி பார்க்க அனுமதிக்காதீர்கள்.

குழந்தைகள் விளம்பரங்களைப் பார்த்து ஆரோக்கியமற்ற பொருள்களைக் கேட்டு அடம்பிடிக்கும்போது, `இது தவறு; இது ஆரோக்கியத்துக்கு ஏற்றதல்ல’ என்பதைப் பொறுமையாகப் பேசிப் புரியவையுங்கள்.

குழந்தைகள் வளர்ந்து பதின்ம வயதை எட்டும்போது, அவர்கள் என்னென்ன நிகழ்ச்சிகளைப் பார்க்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

தொலைக்காட்சி தவிர்த்து தோட்டக்கலை, புத்தகம் வாசிப்பு என எதிலெல்லாம் குழந்தைகளின் கவனத்தைத் திசைதிருப்ப முடியும் என்பதைப் பெற்றோர்கள் திட்டமிட்டுக்கொள்வது நல்லது.

டி.வி பார்ப்பதற்கென குழந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்கி, மற்ற நேரங்களில் அவர்களை வேறு செயல்பாடுகளில் கவனம் செலுத்தவைப்பது நல்லது.

கூடுமானவரை வீட்டிலிருக்கும் பெரியவர்கள் டி.வி பார்க்கும் நேரத்தைக் குறைத்துக்கொண்டாலே இது போன்ற பிரச்சினைகளைத் தவிர்த்துவிட முடியும்.”

குழந்தைகள் ஓவரா டி.வி பார்க்கறாங்களா? கண்களை கவனியுங்கள்!

குழந்தைகள் அதிக நேரம் டி.வி பார்ப்பதால் கண் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

வீட்டில் டி.வி இருக்கும் இடத்திலிருந்து பத்து அடி தூரத்தில் அமர்ந்துதான் பார்க்க வேண்டும். இல்லையெனில், தூரத்துப் பார்வை பிரச்சினை ஏற்படும்.

அதிக நேரம் டி.வி பார்க்கும் குழந்தைகளுக்குக் கண்கள் வறட்சியடைந்து, அலர்ஜி, அரிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

எத்தனை மணி நேரம் டி.வி பார்த்தாலும், அரை மணி நேரத்துக்கு ஒரு முறை கண்களுக்குப் பத்து நிமிடங்கள் ஓய்வு கொடுக்க வேண்டியது அவசியம்.

உங்கள் குழந்தைகள் கண் சார்ந்த பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தால், டி.வி-யை மிக அருகில் சென்று பார்க்க ஆரம்பிப்பார்கள். அடுத்தகட்டமாக கண்களைச் சுருக்கிப் படிப்பார்கள். இந்த அறிகுறிகள் தெரிந்தால், மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

எக்காரணம் கொண்டும் 18வயதுக்கு முன்னர் உங்கள் குழந்தைகளை லேசர் சிகிச்சை செய்ய அனுமதிக்க வேண்டாம்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *