அந்நியர்களின் வருகை! | பகுதி 4


அதன் வெளித்தோற்பகுதியானது ஒரு தனி வெளியுறை போன்று அதன் உடலை இறுக்கமான மூடி ஒரு பாதுகாப்பு உறையாகக் காணப்பட்டது. அவ்வெளியுறை மிகவும் வலிமையானதாகவும் நெகிழ்வுத்தன்மை கொண்டதாகவும் இருந்தது.

இது அவ்வுயிரினத்தை அண்டக்கதிர்களில் (cosmic rays) இருந்து பாதுகாக்கும் ஆற்றல் கொண்டதாக இருந்திருக்கலாம் என மருத்துவர்கள் எண்ணினார்கள். ஏனெனில் பாதுகாப்பில்லாமல் விண்வெளிப்பயணத்தினை மேற்கொள்ளும்போது இவ்வண்டக்கதிர்கள் உடலுக்கு பலத்த தீங்கை விளைவிக்கக்கூடியவை.

பிரேதபரிசோதனையின்போது அவ்வுயிரினத்தின் மூளையின் அமைப்பு தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. ஏனெனில் ரொஸ்வெலில், இவ்வுயிரினம் பறக்கும் தட்டிற்கு வெளியே வீசப்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தபோது அதனை நேரடியாக அணுகிய சில விமானப்படை வீர்ர்கள் அவ்விடத்தில் தங்களை ஒரு இனம்புரியாத ஆழ்ந்த துயரமும் வேதனையும் கவ்விக்கொண்டதாகவும் வருந்திக்கொண்டிருந்த அவ்வுயிரினத்திடம் இருந்துவந்த ஏதோவொரு வீரியமான எண்ண அலைகள்  தமக்கு சில விடயங்களை சொல்ல முற்பட்டதாகவும் ஆனால் அதனை தங்களால் சரியாக புரிந்து கொள்ளமுடியவில்லை எனவும் சாட்சியம் அளித்திருந்தனர்.

இதனை ஒரு முக்கியமான விடயமாக மருத்துவர்கள் கருதினார்கள். ஏனெனில் அவ்வுயிரினம் தனக்கு ஏற்பட்ட வேதனையை விமானப்படை வீர்ர்களிடம் நேரடியாக தனது எண்ணவெளிப்பாட்டு (thought projection) அல்லது ரெலிபதி முறைமூலம் தெரிவிக்க முற்பட்டதே காரணம் எனவும் ஆனால் அவ்வுயிரினம் தொடர்புகொள்ள முயன்ற எண்ணவெளிப்பாட்டு அல்லது ரெலிபதி முறையை கிரகிக்கும் ஆற்றல் நமது மூளைக்கு இருக்கவில்லை என்றும் கூறியிருந்தார்கள்.

ஆனால் மருத்துவர்கள் அதனது மென்மையான மண்டை ஓட்டை அகற்றி அதனது மூளையை பரிசோதனை செய்ய முற்பட்டவேளையில் அது மிகவும் சிதைந்த நிலையிலேயே காணப்பட்டது. அதனால் மருத்துவர்களுக்கு அதனது மூளையின் பகுதிகளை சிறப்பாக மதிப்பிட முடியவில்லை.

அவ்வுரியினம் உயிருடன் இருந்திருந்தால்க்கூட இன்று காணப்படும் கணனிமயப்படுத்தப்பட்ட எக்ஸ்ரே வரைபு இயந்திரங்கள் [Computed Tomography (CT)  machines]  அக்காலத்தில் காணப்படாததால் மருத்துவர்களால் அவ்வுயிரினத்தின் மூளையின் அமைப்பை சிறப்பாக கணித்திருந்திருக்க முடியாது. அவர்களது அறிக்கையிலும் அவ்வுயிரினத்தின் மூளைக்குள்ள ஆற்றல்கள் தொடர்பாக வேறு எந்த தகவல்களும் இடம்பெற்றிருக்கவில்லை.

ஆனால் அவ்வுயிரினங்களின் மூளையின் ஆற்றல் தொடர்பான மேலும் சில தகவல்கள் பறக்கும் தட்டில் இருந்து மீட்கப்பட்ட ‘தலைப்பட்டிகள்’ (headbands) தொடர்பான ஆவணங்களில் காணப்பட்டன. அதிலே குறிப்பிட்டிருந்தபடி, எந்தவித வேலைப்பாடுகளும் அலங்காரங்களும் அற்றுக் காணப்பட்ட தலைப்பட்டிகள் வளையக்கூடிய பிளாஸ்ரிக் போன்ற ஒரு பொருளில் பதிக்கப்பட்டிருந்தது.

அது மின்மூளைவரைபி (electroencephalogram – EEC) இனது கடத்திகளை (conductors) ஒத்துக் காணப்பட்டது. அப்பட்டியை வேற்றுக்கிரக உயிரினத்தின் பெரிய அகன்ற தலையுடன் பொருத்திப் பார்த்தபோது அதன் காதுகளுக்கு சற்று மேலாக தலையின் சுற்றளவுடன் மிகச்சரியாக பொருந்தியதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இக்கருவி வேற்றுக் கிரவாசிகளின் தொலைத்தொடர்பு சாதனமாக பயன்பட்டிருக்கலாம் எனவும் இதனை ஆராய்ந்த பொறியியலாளர்களால் அனுமானிக்கப்பட்டிருந்தது.

509வது படைப்பிரிவின் அதிகாரி ஒருவர் அக்கருவியை தனது தலையுடன் பொருத்திப் பார்த்து அது எவ்வாறு தொழிற்படுகின்றது என அறிய முயற்சித்திருந்தார். ஆனால் அத்தலைப்பட்டியில் எவ்விதமான ஆளிகளோ கம்பிகளோ அல்லது அதனை இயக்கும் பொறிமுறைகளோ காணப்படவில்லை என்பதால் அதனை அவரால் இயக்க முடிந்திருக்கவில்லை.

அத்தோடு தலைப்பட்டி வளைந்து விரியக்கூடியதாக இருந்தாலும் அதனை அவரது தலையின் அளவுக்கேற்ப மாற்றியமைக்க முடிந்திருக்கவில்லை. இதன் பின்னர் அத்தலைப்பட்டியின் அனைத்து பகுதிகளுடனும் தொடுகையை ஏற்படுத்தக்கூடிய வகையில் சற்று பெரிய தலையை உடைய சில அதிகாரிகள் அதனை தமது தலையில் அணிந்து பரிசோதித்து பார்த்தபோது தலைக்குள் மின்னதிர்ச்சி ஏற்பட்டதுபோன்ற உணர்வைப் பெற்றிருந்தார்கள். பின்னர் அத்தலைப்பட்டியை அவர்கள் தலையைச் சுற்றி மெதுவாக நகர்த்தியபோது பலவிதமான நிறங்கள் தங்கள் கண்களுக்குள் தோன்றி மறைந்ததாகவும் தாங்கள் வலிமையான தலையிடியை உணர்ந்தாகவும் தெரிவித்திருந்தார்கள்.

இப்பரிசோதனைகளை நேரில் பார்த்த சில அதிகாரிகளின் கருத்தின் அடிப்படையில் அத்தலைப்பட்டியானது மூளையின் வெவ்வேறு பகுதிகளை தூண்டி தகவல்களை பரிமாறிகொள்ளும் ஆற்றலைக் கொண்டுள்ளதென தெரியவந்தது. இக்கருவியை EEC உடன் ஒப்பிடும்போது, நமது தொழிநுட்ப அறிவுகொண்டு விளங்கிக்கொள்ள முடியாத மிகவும் சிக்கலான பொறிமுறைகளினூடாகவே வேற்றுகிரக உயிரினங்களின் மூளையில் உருவாகும் கணத்தாக்குகளை (impulses) உணர்ந்தறிந்து அவற்றை பரிமாற்றிக் கொள்வதற்கான தகவல்களாகவும் பறக்கும் தட்டை இயக்கும் பிரத்தியேகமான கட்டளைகளாகவும் மாற்றுகின்றது எனத்தெரிவித்திருந்தார்கள்.

விமானப்படையின் 509வது பிரிவின் பொறியியலாளர்களும் ஆய்வாளர்களும் பறக்கும்தட்டினை விரிவாக பரிசோதித்த பின்னர் அதனுள் பொதுவாக பயன்படுத்தப்படும் கட்டுப்பாட்டுக் கருவிகளோ உந்துவிசை அமைப்புகளோ (propulsion system) காணப்படவில்லை என்பதை அறிந்துகொண்டார்கள்.

பறக்கும் தட்டினை  இயங்கவைப்பதற்கான சூட்சுமத்தை ஆராய முயன்ற பின்னர் அவர்கள், இப்பறக்கும் தட்டானது இவ்வேற்றுக்கிரக உயிரினங்களின் மூளையில் உருவாகும் பிரத்தியேக மின் கட்டளைகளால் மாத்திரமே (brainwave guidance system) இயக்குவிக்கப்படக்கூடியது என்ற எடுகோளை முன்வைத்தார்கள்.

இதன்படி வேற்றுக்கிரக வாசிகளின் மூளையில் உருவாகும் கட்டளைகள் தலைப்பட்டியினூடாக பறக்கும்தட்டின் அனைத்து இயக்கங்களையும் கட்டுப்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கு வந்திருந்தார்கள்.

 

 

தொடரும்…

 

 

நன்றி : பதிவுகள் இணையம் |  பொ.மனோLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *