கிளிநொச்சி மண்ணில் வரலாறாய் விளங்கும் உருத்திரபுரம் மகா வித்தியாலயம்


களனி வயல் சூழ் பசுந்தரைகளும், ஓங்கி வளர்ந்த மருத மரங்களும் புடைசூழ, வந்தாரை வரவேற்கின்ற, எழில் கொஞ்சும் அழகிய உருத்திரபுர கிராமத்திலே 1950 ஆம் ஆண்டு முளைவிட்ட ஓர் விருட்சம் தான் கிளிநொச்சி உருத்திரபுரம் மகா வித்தியாலயம்.

.

ஆம்! கிளிநொச்சி பிரதேச குடியேற்றத்தின் தோற்றுவாயாக 40 மாணவர்களுடன் இப்பாடசாலை இரணைமடு பரந்தன் புதிய கொலணி எனும் பெயருடன் 1950 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட, இப்பாடசாலை வரலாற்றின் முதல் அதிபர் என்ற பெருமையை திரு. இ. சிதம்பரம்பிள்ளை அவர்கள் பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து 19 நாட்கள் சேவையுடன் திரு.சிதம்பரம்பிள்ளை மன்னார் கோவிற்குளம் பாடசாலைக்கு மாற்றப்பட 1950 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5 ஆம் திகதி திரு.வே.கதிரவேலு (அப்புஜி) அவர்கள் பாடசாலை அதிபராகப் பொறுப்பேற்றுக்கொண்டார். 12.02.1951 இல் இப்பாடசாலை தனக்கென ஒரு நிரந்தர இடத்தில் இருந்து தனது சேவையைத் தொடங்கியது.

இம்மண்ணில் தமிழ் வளர்த்துப் புகழ் பெற்ற இலக்கிய கலாநிதி பண்டிதமணி கணபதிப்பிள்ளை அவர்களால், பாடசாலைக் கட்டடத்திற்கு முன்பாக நடப்பட்ட வெள்ளைக்கொழும்பன் மாமரம் இப்பாடசாலையின் தொன்மையையும், பெருமையையும் எடுத்தியம்புகின்றது. அதுமட்டுமில்லாது திரு.ச.குமரவேலு மற்றும் திரு.த.பழனிவேலு ஆகிய ஆசிரியப் பெருந்தகைகளால் நடப்பட்ட வெப்பமரங்கள் இரண்டினையும் இன்றும் நாம் காணலாம்.

அதுமட்டுமல்லாது 1962 ஆம் ஆண்டு விவசாய ஆய்வுகூடமும், 1967 இல் விஞ்ஞான ஆய்வுகூடமும் கட்டப்பட்டதுடன், கிளிநொச்சி பகுதியில் முதன் முதலில் விவசாய, விஞ்ஞான ஆய்வுகூடம் கட்டப்பட்ட பாடசாலைகள் என்ற பெருமையினைத் தட்டிச்சென்ற 02 பாடசாலைகளில் ஒன்று கிளி/உருத்திரபுரம் மகா வித்தியாலயம் என்பது பெருமைப்படக்கூடிய விடயமாகும்.

இப்பாடசாலையின் இல்லங்களை பொறுத்தவரையில், 1955 ஆம் ஆண்டு நாவலர், வள்ளுவர், பாரதி எனும் இல்லப் பெயர்களுடன் முதலாவது விளையாட்டுப்போட்டி ஆரம்பமானது. இந்நிகழ்விற்கு பிரதம விருந்தினராக அப்போதைய வட்டாரக் கல்வி அதிகாரி திரு.அருமைநாயகம் வந்திருந்தமையை இன்றும் பாடசாலைச் சமூகம் நினைவு கூறுகின்றது.

பின்னர் 1963 இல் தற்போது உள்ள இல்லங்களான சேரன், சோழன், பாண்டியன் என பெயர் மாற்றப்பட்டதுடன், இவ்வாண்டிலேயே இப்பாடசாலை தன்னுடைய வளர்ச்சியில் ஒருபடி மேலேறி பாடசாலைக் கொடி உருவாக்கப்பட்டது.

அதுமட்டுமல்லாது 1968 இல் எச்.எஸ்.சி எனப்படும் உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டது. இருப்பினும் பின்னர் ஆசிரியர் இன்மை காரணமாக இவ்வகுப்புக்கள் இடைநிறுத்தப்பட, இயங்காத 1987 இல் திரு.கா.நாகலிங்கம் அதிபராக கடமையாற்றிய காலத்தில் மீண்டும் உயர்தரக் கலை,வர்த்தக பிரிவு வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டு பாடசாலை தரம் 1C பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

..

இவ்வாறு இப்பாடசாலை படிப்படியாக உயர்ந்து வரும் காலத்தில் தான், 1996 இல் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையான “சத்ஜெய” எல்லாவற்றையும் துவம்சம் செய்து போட்டது. இந்நிலையில் இப்பாடசாலை இடம்பெயர்ந்து ஸ்கந்தபுரம் இல-2 பாடசாலை வளாகத்தில் தற்காலிக கொட்டகைகளில் இயங்கத் தொடங்கியது.

துன்பத்தைக் கண்டு துவண்டு போகாது மீண்டும் 2001 இல் தனது சொந்த இடத்தில் அப்போதைய அதிபர் திரு.சு.கணேசதாசன் அவர்களின் முயற்சியுடனும், அர்ப்பணிப்புடனும் மீண்டும் தலைதூக்கியது.

போரின் நெருக்கங்கள் தற்காலிகமாக முடிவுற, சமாதானச் சூழலில் கிடைக்கும் வளங்களுடன் கிடைத்த வாய்ப்புக்களைப் பயன்படுத்தி 2003 ஆம் ஆண்டு உடற்பயிற்சிப் போட்டிகளில் மாகாண மட்டத்தில் முதலிடத்தைப் பெற்றுக்கொண்டதோடு, அதே வருடம் நடைபெற்ற அகில இலங்கைப் போட்டியில் 4ம் இடத்தைப் பெற்றுக் கொண்டமையும் பெருமைக்குரிய விடயமாகும்.

அதனைத் தொடர்ந்து 2008 ஒக்டோபரில் இடம்பெற்ற இடப்பெயர்வு பாடசாலையின் முழுப் பௌதீக வளங்களையும் பாடசாலைப் பிள்ளைகளையும், ஆசிரியர்களின் உயிர்களையும் காவுகொண்டது.

எரிந்த சாம்பலின் கர்ப்பத்திலிருந்தும் ஜனித்தெழும் பீனிக்ஸ் பறவைகள் போல் யுத்தத்திற்குப் பின்னர் அதிபர் திருமதி.மீனலோஜினி இதயசிவதாஸ் அவர்களின் நெறிப்படுத்தலின் கீழ் மீண்டும் பொலிவு பெற்று கிளிநொச்சி மாவட்டத்திலே தனக்கென ஓர் இடத்தைப் பெற்று நிற்கின்றது.

.

இவ்வாறு இப்பாடசாலை மீண்டும் தலைதூக்கி நிற்பதற்கு உருத்திரபுரப்பதி வாழ் மக்களுடைய பங்கு இன்றியமையாததொன்றாகும். அத்துடன் இப்பாடசாலையில் கல்வி கற்று தற்போது பிரித்தானியாவில் வாழும் பழையமாணவர் ஒன்றுசேர்ந்து பாடசாலை அபிவிருத்தி அமைப்பினை உருவாக்கியுள்ளார்கள். அதுமட்டுமன்றி இவ்வமைப்பினூடாக பல அளப்பரிய சேவைகளைச் செய்ய இருக்கிறார்கள். எனவே எதிர்வரும் காலங்களில் இப்பாடசாலை விண்ணைத்தொடும் அளவிற்கு உயர இருக்கிறது என்றால் அது வியப்பதற்கில்லை.

வணக்கம் இலண்டனுக்காக தேன்மொழிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *