அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைதாகி விடுதலை


ஈரான் கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த 10 அமெரிக்க கடற்படை வீரர்கள் ஈரான் ராணுவத்தால் கைது செய்யப்பட்டனர். இந்தக் கைது நடவடிக்கையின் போது அவர்கள் மன்னிப்பு கேட்டு சரணடைந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.

ஈரானுக்குச் சொந்தமான பார்சி தீவை ஒட்டிய கடல் எல்லைக்குள் இரு அமெரிக்க போர்ப் படகுகள் நேற்று முன் தினம் நுழைந்தன. இதையடுத்து, அந்தப் படகுகளில் இருந்த 10 கடற்படை வீரர்களை ஈரான் ராணுவத்தினர் கைது செய்தனர்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட ஒரு பெண் உள்ளிட்ட 10 வீரர்கள் தரையில் அமர்ந்திருக்கும் படத்தையும், வீரர்கள் கப்பலில் மன்னிப்பு கேட்டு சரணடைந்த, ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்ட காட்சிகள் அடங்கிய வீடியோவையும் ஈரான் ஊடகங்கள் நேற்று வெளியிட்டது.

இதனைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்ட 10 பேரும் விடுதலை செய்யப்பட்டதாக ஈரான் தொலைக்காட்சி அறிவித்தது. அமெரிக்கக் கடற்படை வீரர்கள் வேண்டுமென்றே ஈரான் எல்லைக்குள் நுழையவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததால், அவர்கள் விடுவிக்கப்பட்டதாக ஈரான் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வீரர்கள் விடுவிக்கப்பட்டதற்கு நன்றி தெரிவித்த வெளியுறவு துறை செயலர் ஜான் கெர்ரி நாங்கள் செய்தது தவறுதான் என்று கூறி ஈரானிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையே பல ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில்தான் தூதரக உறவு புதுப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *