மகனின் மச்சத்தை வைத்து 18 ஆண்டுகளுக்கு முன் கடத்தப்பட்ட தன் மகனை அடையாளம் கண்டுபிடித்த தாய் | சீனா


சீனாவின் குய்ழோ மாகாணத்தை சேர்ந்த க்சியாவோ குவிங் என்ற 4 வயது சிறுவனை கடந்த 1997-ம் ஆண்டு ஒருவர் கடத்திச் சென்றார். சுமார் ஆயிரம் கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பியூஜியான் மாகாணத்துக்கு 2 நாள் பயணமாக அழைத்துச் சென்று அங்குள்ள ஒரு தம்பதியருக்கு அந்த சிறுவனை பணத்துக்கு விற்று விட்டார்.

ழெங் என்ற புதுப்பெயருடன் தத்தெடுத்தப் பெற்றோரின் பாச மழையில் அங்கு வளர்ந்து வந்த அந்த சிறுவன் படித்து, பட்டம் பெற்று, வேலையில் சேர்ந்து சுயமாக சம்பாதிக்க தொடங்கியதும் தனது நிஜ பெற்றோரை தேட ஆரம்பித்தார். தற்போது 22 வயது வாலிபராக வளர்ந்துவிட்ட அவருக்கு தனது சொந்த ஊர், மற்றும் பெற்றோரைப் பற்றிய எந்த நினைவுகளும் இல்லாத நிலையில் போலீசாரின் உதவியை நாடினார்.

அவரது ரத்த மாதிரியை பெற்று டி.என்.ஏ. பரிசோதனை செய்த போலீசார் 1997-ம் ஆண்டு குய்ழோ மாகாணத்தில் காணாமல் போனதாக புகார் அளிக்கப்பட்ட 4 வயது சிறுவனின் ரத்த மாதிரியும், இந்த வாலிபரின் ரத்த மாதிரியும் ஒன்றாக இருப்பதை கண்டுபிடித்தனர். இந்த தகவலை ழெங்கிடமும் தெரிவித்தனர்.

மகன் கடத்தப்பட்ட பிறகு 10 நாட்கள் வரை அவனைத் தேடி அலுத்துபோன அவரது தந்தை சித்தபிரமை பிடித்தவராகி, பின்னாளில் மன நோயாளியாக மாறிவிட்ட தகவல் ழெங்குக்கு தெரியவந்தது. இதையடுத்து, தனது குடும்ப முகவரியை உள்ளூர் போலீசார் மூலம் அறிந்து கொண்டு உடனடியாக சொந்த ஊருக்கு சென்ற ழெங்கை அவரது பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் அடையாளம் தெரியவில்லை.

நடந்த சம்பவத்தை எல்லாம் அவர் விளக்கி கூறிய பின்னர் அருகில் இருந்த அவரது தாய்மாமன் ழெங்கின் சட்டையை விலக்கி கையில் இருந்த சிறிய மச்சத்தின் மூலம் அடையாளம் கண்டுபிடித்தார். இவன் 18 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன நம் வீட்டுப் பிள்ளை க்சியாவோ குவிங்தான் என்று உறுதிப்படுத்தினார்.

அவரை இறுக அணைத்து ஆனந்த கண்ணீர் வடித்த தாயை சமாதானப்படுத்த உணர்வற்றவராக நின்றிருந்த ழெங்கின் தந்தை, இங்கு என்ன நடக்கின்றது? என்பதை புரிந்து கொள்ளக்கூட முடியாத மனநிலையில் இருந்தது, அங்கிருந்த அனைவரையும் கண் கலங்க வைத்தது.

இனி, சுமார் 18 ஆண்டுகளாக உங்களை வளர்த்த பெற்றோருடன் வாழ விருப்பமா? அல்லது, இங்கேயே சொந்த பெற்றோருடன் வாழப் போகிறீர்களா என்ற உள்ளூர் பத்திரிகையாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த ழெங், அது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *