விர்ஜின் காலக்டிக் நிறுவனம் அறிவுப்பு | விண்வெளி சுற்றுலா பயணத் திட்டம் தொடரும்


விண்வெளிக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்ல உருவாக்கிய விமானம் சோதனையோட்டத்தில் வெடித்துச் சிதறியபோதிலும், விண்வெளிப் பயணத் திட்டம் தொடரும் என்று அத்திட்ட மேம்பாட்டாளரும் தொழிலதிபருமான ரிச்சர்ட் பிரான்ஸன் கூறினார்.

சுற்றுலா பயண முறையில் பொதுமக்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் திட்டத்தை பிரிட்டனின் பிரபல விர்ஜின் குழுமத்தைச் சேர்ந்த விர்ஜின் காலக்டிக் நிறுவனம் அறிவித்தது.

இதற்காக உருவாக்கப்பட்ட சிறப்பு விமானம் மூலம், முதல் கட்டமாக அடுத்த ஆண்டு 6 பயணிகளை விண்வெளிக்கு அழைத்துச் செல்லத் திட்டமிடப்பட்டிருந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை (அக். 31) இதற்கான சோதனையோட்டம் நடைபெற்றது. விண்வெளிப் பயண விமானத்தில் இரு விமானிகள் இருந்தனர். அதனைத் தாங்கிச் சென்ற தாய் விமானம் 45,000 அடி உயரத்தை எட்டியதும், இரு விமானங்களும் நடுவானில் பிரிந்தன.

ஆனால், அடுத்த சில விநாடிகளிலேயே விண்வெளிப் பயண விமானம் நடுவானில் வெடித்துச் சிதறியது. இந்த விபத்தில் ஒரு விமானி உயிரிழந்தார்.

சோதனையோட்டத்தின்போதே, விமானம் வெடித்துச் சிதறியது, அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த சிறப்பு விமானத்தின் 35-ஆவது சோதனையோட்டம் என அந்நிறுவனம் தெரிவித்தது.

இந்நிலையில், விண்வெளிச் சுற்றுலா திட்டத்தை அறிவித்த விர்ஜின் காலக்டிக் விண்வெளிப் பயண நிறுவனத்தின் தலைவரும் பிரபல தொழிலதிபருமான ரிச்சர்ட் பிரான்ஸன், சோதனையோட்டத்தின் தோல்வி குறித்து அறிய பிரிட்டனிலிருந்து அமெரிக்காவிலுள்ள ஏவுதளத்துக்கு விரைந்தார்.

கலிஃபோர்னியா மாகாணத்தில் அந்நிறுவனத்தின் விமான நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அவர், விண்வெளிப் பயண ஆராய்ச்சி தொடரும் எனவும், விண்வெளி சுற்றுலா பயணத் திட்டம் கைவிடப்படாது எனவும் தெரிவித்தார்.

விண்வெளிக்குப் பயணம் மேற்கொள்ள ஒருவருக்கு 2.5 லட்சம் டாலர் (சுமார் ரூ. 1.5 கோடி) கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹாலிவுட் நடிகர்கள் உள்ளிட்ட 500-க்கும் மேற்பட்ட முக்கிய புள்ளிகள் விண்வெளிப் பயணத்துக்கு முன்பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தகுந்தது.

கடந்த செவ்வாய்க்கிழமை, விண்வெளியில் உள்ள சர்வதேச ஆராய்ச்சி நிலையத்துக்கு உபகரணங்களை எடுத்துச் சென்ற அமெரிக்க ராக்கெட் வெடித்துச் சிதறியது. இதைத் தொடர்ந்து, அடுத்த சில நாட்களிலேயே மற்றொரு விண்வெளிப் பயணத் திட்டத்துக்கான விமான சோதனையோட்டமும் விபத்தில் முடிவுற்றுள்ளது.

இதற்கிடையே, விமான விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்த விசாரணை தொடங்கியுள்ளது. இந்த விசாரணை முடிவுகள் வெளியாக ஒரு வருடம் ஆகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *