117 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை | பாகிஸ்தான் நீதிமன்றம்


பாகிஸ்தானில் முன்னாள் மனைவி மற்றும் அவரது கணவர் மீது ஆசிட் வீசிய நபருக்கு 117 ஆண்டு கடுங்காவல் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாகாணம் முல்தான் நகரில் வசித்து வந்தவர் ஜவேதான் பீபி. கடந்த ஆண்டு டிசம்பர் 7-ம் தேதி இவரது வீட்டிற்குள் அத்து மீறி நுழைந்த முகமது அம்ஜத் என்பவர், ஜவேதான் பீபி மற்றும் அவரது கணவர் மீது அமிலத்தை ஊற்றிவிட்டு தப்பி ஓடிவிட்டார். படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜவேதான் பீபி இறந்துவிட்டார். அவரது கணவர் ரியாஸ் தீவிர சிகிச்சைக்குப் பின்னர் உயிர்பிழைத்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அம்ஜத்தை கைது செய்தனர். விசாரணையில் அம்ஜத், ஜவேதான் பீபியின் முதல் கணவர் என்பதும், விவாகரத்து பெற்றுக்கொண்டு வேறு ஒருவரை திருமணம் செய்ததால் ஆத்திரத்தில் ஆசிட் வீசி தாக்கியதும் தெரியவந்தது.

இதையடுத்து அம்ஜத் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, முல்தானில் உள்ள தீவிரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. அம்ஜத் மீதான குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டதையடுத்து, அவருக்கு 117 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *