உடற்கூறியல் ஆய்வுக்கு மருத்துவ மாணவர்களுக்காக செயற்கை உடல்கள் தயாரிப்பு


மருத்துவ மாணவர்களின் உடற்கூறு பரிசோதனைக்கு தேவையான உணர்வுள்ள செயற்கை மனித உடலை உருவாக்கி சாதனை படைத்துள்ளது அமெரிக்காவின் சின்டோவர் ஆய்வகம். மருத்துவ மாணவர்கள் தங்களது உடற்கூறியல் ஆய்வுக்கு மனிதர்களின் பிணத்தை ஆய்வு செய்வது உண்டு. பிணவாடை பிடிக்காத பல மாணவர்களுக்கு அலர்ஜி ஏற்படுவதுண்டு. இவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ள செயற்கை உடல் மற்றும் செயற்கை உறுப்புகள். அச்சு அசலாக மனிதனை போலவே ரத்தம் சிந்தும், மூச்சு விடும் தன்மையுள்ள இந்த செயற்கை உறுப்புகளை அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள டம்பா பகுதியில் உள்ள சின்டோவர் ஆய்வகம் தயாரித்துள்ளது. முன்பு ரப்பர் மற்றும் சிலிகான் அல்லது பிளாஸ்டிக்கில் உருவாக்கப்பட்டு வந்த இந்த செயற்கை உறுப்புகள் தற்போது உயிருள்ள திசுக்களுடன் கூடியதாக உருவாக்கியுள்ளது சின்டோவர்.

முன்பு தயாரிக்கப்பட்ட உடல் தசைகள் நெகிழும் தன்மை மற்றும் ஈரப்பசை அற்றதாக இருந்த நிலையில் தற்போது சின்டோவர் நெகிழும் தன்மையுடன் ஈரப்பசையுடன் கூடிய செயற்கை உறுப்புகளை தயாரித்துள்ளது. இது மருத்துவ மாணவர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக அந்த ஆய்வகத்தின் வர்த்தகப் பிரிவு துணைத் தலைவர் கெவின் கிங் கூறியதாவது: உண்மையான மனித உடல் போல காட்சியளிக்கும் இந்த செயற்கை உடல் ₹65 லட்சத்துக்கு விற்பனை செய்யப்படுகிறது. இயங்காத தன்மையுள்ள உடல் ₹44 லட்சத்துக்கு கிடைக்கிறது. உடல் உறுப்புகள் மற்றும் திசுக்கள் அனைத்தும் உண்மையானது போன்றே இருக்கும். சாப்ட்வேர் ஒன்றின் கட்டுபாட்டில் இயங்கும் இந்த செயற்கை உடல், இதய துடிப்பு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை கொண்டதாக இருக்கும். இவ்வாறு கிங் தெரிவித்தார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *