அமெரிக்காவில் இருதயக் கோளாறுடன் பிறந்த குழந்தைக்கு இருதய மாற்றுச் சிகிச்சை


அமெரிக்காவில் இருதயக் கோளாறுடன் பிறந்து, ஆறே நாள் ஆன குழந்தைக்கு இருதய மாற்று அறுவைச் சிகிச்சை செய்து அந்த நாட்டு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

ஆலிவர் கிராஃபோர்டு என்ற அந்தக் குழந்தையின் இருதயத்தில், “வென்ட்ரிகல்’ எனப்படும் இடது கீழறை அளவுக்கு மீறி பெரிதாக இருந்ததை, அது தாயின் வயிற்றிலிருந்த 24-ஆவது வாரத்திலேயே மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இந்த நிலையில், குறித்த தேதிக்கு 7 வாரங்களுக்கு முன்பாகவே அந்தக் குழந்தை கடந்த மாதம் 5-ஆம் தேதி பிறந்தது.  அந்தக் குழந்தைக்கு இருதய மாற்று அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளலாம் என மருத்துவர்கள் முடிவு செய்தனர். இந்த நிலையில், ஆலிவர் பிறந்த ஆறாவது நாளில் அவனுக்குப் பொருத்தமான மாற்று இருதயம் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து, 10 மணி நேரம் நடைபெற்ற அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்தப் பச்சிளம் குழந்தையின் குறைபாடுள்ள இருதயம் அகற்றப்பட்டு, தானமாகப் பெறப்பட்ட மாற்று இருதயம் பொருத்தப்பட்டது.

தற்போது அந்தக் குழந்தை 2.8 கிலோ எடையுடன் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆலிவரின் பெற்றோர்கள் வியாழக்கிழமை கூறுகையில், “”எப்போது என்ன நடக்குமோ என்று பயந்து கொண்டிருந்த எங்களுக்கு, தற்போது ஆலிவர் ஒரு அற்புதமாகக் காட்சியளிக்கிறான்” என்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *