இங்கிலாந்தில் விரைவில்புதிய சட்டம் | குழந்தைகளுடன் பயணிக்கும்போது காரில் சிகரெட் பிடிக்க தடை


இங்கிலாந்தில் காரில் குழந்தைகள் இருக்கும்போது, சிகரெட் பிடிக்க விரைவில் தடை விதிக்கப்பட உள்ளது. இதற்கான புதிய சட்டம் அடுத்த மாதம்  நிறைவேற்றப்படும் என்று தெரிகிறது. புதிய சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் சட்டம் அமலுக்கு வந்துவிடும். அதன் பின்னர் சட்டத்தை  மீறுபவர்களுக்கு 50 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்படும். இந்த வழக்கு நீதிமன்றத்திற்கு சென்றால் அபராதத் தொகை மேலும் அதிகரிக்கக்கூடும். அதேபோல், காரில்  குழந்தைகள் இருக்கும்போது, பயணம் செய்பவர் சிகரெட் பிடிப்பதை தடுக்க கார் டிரைவர் முயற்சி செய்யவில்லை என்றால், டிரைவருக்கும் 50 பவுண்டுகள் அபராதம்  விதிக்கப்படும். காரில் குழந்தைகளுடன் செல்லும் பெற்றோர் சிகரெட் பிடிப்பதைத் தடுக்க மட்டும் இந்த சட்டம் கொண்டுவரவில்லை. காரில் குழந்தைகளுடன் யார் பயணம்  செய்தாலும் சிகரெட் பிடிக்கக் கூடாது. சட்டத்தை மீறினால் அவர்களுக்கு தண்டனை உறுதி. குழந்தைகள் மற்றும் குடும்பச் சட்டத்தில் இதற்கு வகை செய்யும் விதத்தில்  சட்டத் திருத்தம் மேற்கொள்ளப்பட உள்ளது.

18 வயதுக்கு கீழ் உள்ள சிறுவர் சிறுமியர் பயணம் செய்யும்போது காரில் யாரும் சிகரெட் பிடிக்கக்கூடாது. அதற்கும் தடை விதிக்க இந்த சட்டத்தில் வகை  செய்யப்பட்டுள்ளது. சிகரெட் குடிப்பவர்களால் அவர்களது உடல் நலத்திற்கு கேடுவிளைப்பதோடு, அருகில் உள்ள மற்றவர்களின் உடல் நலத்தையும் பாதிக்கச் செய்கின்றனர்.  சிகரெட் பிடிப்பவர்களால் அவர்களுக்கு அருகில் உள்ள குழந்தைகளின் உடல் நலம் பாதிக்க அனுமதிக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. நாட்டின் எதிர்கால  தூண்களான குழந்தைகளின் நலனைக் காப்பதில் அரசு உறுதியாக உள்ளது என்று இங்கிலாந்து பொது சுகாதாரத் துறை அமைச்சர் ஜானி எலிஸ்சன் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பார்கள். புதிய சட்டத்திருத்த  மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேறியதும் சட்டம் 2015 அக்டோபர் 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துவிடும்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *