சீனர்கள் 19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்


சுறுசுறுப்புக்கு பெயர்போன சீனர்கள் 19 நாட்களில் 57 மாடி கட்டிடத்தை உருவாக்கி அசுர சாதனை படைத்துள்ளனர்.

மத்திய சினாவில் உள்ள ஹுனான் மாகாண தலைநகரான சங்ஷாவில் எழும்பியுள்ள இந்த கட்டிடத்தின் முதல் 3 மாடி பகுதிகள் ஒவ்வொரு செங்கல்லாக அடுக்கி ஒரே நாளில் கட்டி முடிக்கப்பட்டது. பின்னர், ஏற்கனவே அச்சில் வார்க்கப்பட்டு, காய்ந்து தயார் நிலையில் இருந்த கான்கிரீட் துண்டங்கள் ராட்சத லாரிகளில் ஏற்றி வரப்பட்டன.

அவற்றை கிரேனின் உதவியுடன் பொறியாளர்கள் உரிய இடத்தில் நிலை கொள்ள வைத்தனர். இப்படியாக 57 மாடிகளுக்கான பில்லர் வேலைகள் நிறைவு பெற்றன. பின்னர், சீனாவின் சுற்றுச்சூழல் மாசினை கருத்தில் கொண்டு, மாசினால் பாதிக்காத ‘குவாட்ரா கிளாஸ்’களின் மூலம் கட்டிடத்தின் சுவர்கள் ஒட்டி இணைக்கப்பட்டன. இப்படி இரவு, பகல் என பாராமல் 19 நாட்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றிய பொறியாளர்களும், கூலி தொழிலாளர்களும் இந்த பணியை கனகச்சிதமாக நிறைவு செய்துள்ளனர்.

இந்த பணிக்கு தேவையான சாதனங்கள் வேலை நடைபெறும் இடத்துக்கு 15 ஆயிரம் லாரி லோடுகள் மூலம் கொண்டுவந்து குவிக்கப்பட்டன. திட்டமிட்டபடி பத்தொன்பதே நாளில் கட்டி முடிக்கப்பட்ட இந்த கட்டிடத்தில் 800 அடுக்ககங்கள் (அபார்ட்மென்ட்) அமைந்துள்ளன. சுமார் 4 ஆயிரம் பேர் வரை இங்கு வசிக்கலாம்.

இதை கட்டி முடித்த கட்டுமான நிறுவனம் ஏற்கனவே சங்ஷா நகரில் 15 நாட்களில் 30 மாடி கட்டிடத்தை கட்டி முடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, கட்டி முடிக்கப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை 220 அடுக்கு கொண்டதாக உருவாக்க திட்டமிட்டிருந்ததாகவும், அருகாமையில் விமான நிலையம் அமைந்துள்ளதால் அந்த திட்டம் கைவிடப்பட்டதாகவும் தெரிவித்துள்ள இந்த கட்டுமான நிறுவனம், மனித வரலாற்றிலேயே இதைப் போன்ற கட்டுமான தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டது இதுவே முதல்முறை என பெருமைப்பட தெரிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *