கூர்ப்படையும் மனிதர்… | பகுதி 2


நுண்ணறிவினது வளர்ச்சிப்போக்கு பற்றிய ஆராய்ச்சிகள் தற்போது விஞ்ஞானிகள் மத்தியில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. நுண்ணறிவின் வளர்ச்சிப்போக்கானது கூர்ப்பில் மனித மூளையின் கனவளவு அதிகரிப்போடு நேரடியான தொடர்பைக்காட்டுவதாக உள்ளது. Homo habilis இனத்தின் மண்டைஓட்டை ஆராய்ந்தபோது அவற்றில் மூளையின் கனவளவு வெறும் 500 – 600cm3 அளவே இருந்துள்ளது.

ஆனால் மூளையின் பருமன் பரிணாம வளர்ச்சிப்போக்கில் ஏனைய மனித மூதாதையர்களில் படிப்படியாக அதிகரித்து இன்றைய நவீன மனிதனில் அதன் கனவளவானது 1200 – 1850cm3 ஆக காணப்படுகின்றது. இது மூளையின் பருமனில் மூன்று மடங்கு அதிகரிப்பைக் காட்டுகின்றது. அந்தவகையில் மூளையின் பருமன் அதிகரிப்பு நுண்ணறிவின் வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்துள்ளது. ஆனால் சில ஆய்வாளர்களின் கருத்துப்படி நுண்ணறிவானது கூர்பினூடாக படிப்படியாக அதிகரித்திருந்தாலும் அண்மைக்காலம் வரை மனிதன் தற்போது கொண்டுள்ள பாரிய நுண்ணறிவு வளர்ச்சியைப் பெற்றிருக்கவில்லை எனவும் சில ஆயிரம் வருடங்களினுள்ளே மூளையின் பருமனிலே பாரிய மாற்றமெதுவும் ஏற்படாதபோதும் நுண்ணறிவு பல மடங்காக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதற்கான காரணத்தை அறிய பல விஞ்ஞானிகள் முற்பட்டுக் கொண்டிருக்கையில் ‘புராதன விண்வெளி கோட்பாட்டாளர்கள்’ (Ancient Astronaut Theorists – AAT) என்று தம்மை அடையாளப்படுத்தும் ஆய்வாளர்கள் சிலர் பின்வருமாறு அதற்கு விளக்கமளித்துள்ளனர்.

எவ்வாறெனில் குறுகிய காலப்பகுதியில் மனிதன் அடைந்த இப்பாரிய நுண்ணறிவு வளர்ச்சியானது இயற்கையான பரிணாமவளர்ச்சியினூடாக ஏற்பட்ட ஒரு மாற்றம் அல்லவெனவும் அது மனிதனைவிட நுண்ணறிவில் அதீத வளர்ச்சியடைந்த வேற்றுக் கிரகவாசிகளின் (extraterrestrials) தலையீட்டின் காரணமாக ஏற்பட்டதெனவும் கூறுகின்றனர்.

மனிதர்களை இவ்வேற்றுக்கிரக வாசிகளால் உருவாக்கப்பட்ட அல்லது அவர்கள் வழி வந்த இனமாக கருதும் இவர்கள், நமது மூதாதையர்கள்  வேற்றுக்கிரக வாசிகளையும் அவர்களது அதிநவீன தொழிநுட்பங்களையுமே அளப்பரிய சக்தி கொண்ட கடவுளாகவும் தெய்வத் தூதுவர்களாகவும் பிழையாக கற்பிதம் கொண்டதாக வாதாடுகின்றனர்.

மனித வரலாற்றை பின்னோக்கிப் பார்க்கும்போது பல முக்கியமான வரலாற்று மாற்றங்களின்போதும் இவ்வேற்றுக்கிரகவாசிகளின் பிரசன்னம் பூமியில் இருந்துள்ளது எனவும் இவர்களே மனிதனின் பரிணாம வளர்ச்சியையும் வரலாற்றினையும் நெறிப்படுத்தினார்கள் எனவும் நம்புகின்றனர். அந்தவகையில் இவ்வேற்று கிரகத்தவர்கள் பண்டைய மனிதனில் பல பரிசோதனை முயற்சிகளை மேற்கொண்டு மனிதனின் உடல் ஆற்றலையும் நுண்ணறிவினையும் அதிகரிக்க முயன்றிருப்பதாக பல ஆதாரங்களையும் முன்வைக்கின்றார்கள். இக்கொள்கையை தீவிரமாக சார்ந்து நிற்கும்  எரிக் வொன் டெனிக்கன் (Erich Von Daniken) எனும் ஆய்வாளர் Chariots of the Gods எனும் இது தொடர்பான தனது ஆய்வு நூலில் இங்கிலாந்தில் அமைந்துள்ள ஸ்ரோன்ஹென்ஞ் (Stonehenge), பொலிவியாவின் திவானாகு (Tiwanaku) பகுதியிலுள்ள புமாபுங்கு (Pumapunku), ஈஸ்டர் தீவின் மொய் (Moa of Ester Island), கிசாவின் உயர்ந்த பிரமிட் (Great Pyramid of Giza) போன்ற பல புரதான நினைவுச்சின்னங்களின் கட்டுமானத்தில் நவீன சிக்கலான தொழிநுட்பங்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதாகவும் அத்தொழிநுட்பத்தை வேற்று கிரகத்துவாசிகளிடம் இருந்து நமது மூதாதையர்கள் பெற்றுக்கொண்டு அவற்றை கட்டியிருக்கலாம் அல்லது வேற்றுக்கிரகத்து வாசிகளே அவற்றை கட்டியிருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்.

கிழக்கத்தைய மற்றும் மேற்கத்தைய புராணங்களில் வர்ணிக்கப்படும் மிருக-மனித கலப்பு உருவங்களும் எகிப்தில் அமைந்துள்ள பிரமிட்டில் வரையப்பட்டிருக்கும் ஓவியங்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் சிற்பங்களிலும் காணப்படும் மிருகத்தலையுடன் கூடிய உருவங்களும் மேலும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சில எலும்புக்கூடுகளும் மனிதனது மரபணுக்களை விலங்குகளின் மரபணுக்களுடன் கலந்து மரபணுப்பொறியியல் முறை மூலம் புதிய இனங்களை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட ஒரு முயற்சியாக ஆதாரம் காட்டுகின்றனர். இவை பண்டைய மனிதர்களின் புனைக்கதைகளின் கதாபாத்திரங்களாக இருக்க வாய்ப்பிலை ஏனன்றால் அவர்கள் எப்போதும் தாம் பார்ப்பவற்றையே ஓவியங்களாக அல்லதுசிற்பங்களாக வடிக்கும் வழக்கத்தை கொண்டிருந்தவர்கள்.

இந்தவகையில் தமது மரபணுக்களை மனிதர்களின் மரபணுக்களுடன் கலந்து இன்றைய அதீத நுண்ணறிவுள்ள நவீன மனிதனை வேற்றுக்கிரக வாசிகள் உருவாக்கியிருக்கலாம் எனக்கூறி, மிகக்குறுகிய காலப்பகுதியிலே மனிதன் அடைந்த பாரிய நுண்ணறிவு வளர்ச்சிக்கு தமது புதிய கருத்தியலை காரணமாக முன்வைக்கின்றனர். புராதன விண்வெளி கோட்பாளர்களின் இக்கருத்தியல் தற்போதுள்ள சமயங்களையும் கடவுள் வழிபாட்டு முறைகளையும் கேள்விக்குள்ளாக்கியதோடு விஞ்ஞானிகளிடையே பல வாதப் பிரதிவாதங்களையும் தோற்றுவித்தது. இதற்கு முக்கிய காரணம் இதுவரை இப்பிரபஞ்ஞத்தில் உயிர்வாழ்வதற்கேற்ற வகையிலுள்ள இன்னுமொரு கிரகத்தை விண்வெளி ஆய்வாளர்களினால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதேயாகும். ஆனால் அவ்வாறான பல கிரகங்கள் இருப்பதற்கும் அவற்றில் நம்மைவிட தொழிநுட்பத்தில் பாரிய வளர்ச்சியடைந்த இனங்கள் இருப்பதற்குமான வாய்புகளை மறுப்பதற்கில்லை.

கூர்ப்பினூடக மனித இனம் நுண்ணறிவிலே ஏனைய இனங்களைவிட இமாலய வளர்ச்சியடைந்திருந்தாலும் ஒரு சில முக்கியமான பண்புகளை முற்றாக இழந்துள்ளதென்றே எண்ணத்தோன்றுகிறது. அவற்றில் முக்கியமானது நிலநடுக்கங்கள், எரிமலைக் குமுறல்கள், சுனாமிகள் போன்ற இயற்கை அழிவுகளை முன்கூட்டியே உணர்ந்தறியும் அறிவாற்றலாகும். சாதாரண சிற்றெறும்பிலிருந்து பாம்புகள், டொல்பின் மீன்கள், பறவைகள், நாய்கள், குரங்குகள் என பொதுவாக அனைத்து உயிரினங்களும் இவ்வழிவுகளை பல மணி நேரங்களுக்கு முன்கூட்டியே உணர்ந்தறிந்து பாதுகாப்பான இடங்களை நோக்கி  செல்வதையும் விநோத சத்தங்களை எழுப்புவதையும் பல ஆய்வாளர்கள் விலங்குகளின் நடத்தையினை ஆய்வு செய்ததன் மூலம் கண்டுள்ளனர். அந்தவகையில் ஏனைய உயிரினங்கள் அவ்வாற்றலைக் கொண்டுள்ளபோது அவற்றைவிட கூடிய நுண்ணறிவுடைய மனிதனுக்கு ஏன் இவ்வறிவு மேலும் சிறப்பாக விருத்தியடையாமல் முற்றாக அற்றுப்போனதென்று தெரியவில்லை.

 

 

 

தொடரும்……

 

 

நன்றி : பொ. மனோ | பதிவுகள் இணையம்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *