இஸ்ரேலின் பாதுகாப்பு கெடுபிடிகள் அல் – அக்ஸாவில் வாபஸ்

2 views

பலஸ்தீனர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய ஜெரூசலம் புனித அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் கொண்டுவரப்பட்ட புதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் அனைத்தையும் இஸ்ரேல் அகற்றிக்கொண்டுள்ளது. இதனை அடுத்து பள்ளிவாசலுக்கு வெளியில் திரண்ட ஆயிரக்கணக்கான பலஸ்தீனர்கள் நேற்று அதிகாலையில் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒருவாரத்திற்கு மேல் புறக்கணிக்கப்பட்டு வந்த நிலையில் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைய அல் அக்ஸா நிர்வாகம் முஸ்லிம் வழிபாட்டாளர்களுக்கு அழைப்ப விடுத்துள்ளது.

அல் அக்ஸா வளாகத்தின் நுழைவாயில்களில் இஸ்ரேல் புதிதாக அமைத்த தடுப்புகள், கம்பி வேலிகள் மற்றும் கண்காணிப்பு கெமராக்களை இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் நேற்று சூரியோதயத்திற்கு முன்னர் அகற்றினர்.

ஏற்கனவே இந்த நுழைவாயில்களில் வைத்திருந்த உலோகங்களை கண்டறியும் கருவிகளை இஸ்ரேல் இராணுவம் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அகற்றிக் கொண்டது.

கடந்த ஜுலை 14 ஆம் திகதி இரு இஸ்ரேலிய பொலிஸார் கொல்லப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை அடுத்தே அல் அக்ஸா வளாகத்தில் இஸ்ரேல் புதிய பாதுகாப்பு கெடுபிடிகளை அறிமுகம் செய்தது. எனினும் இந்த நடவடிக்கை கடந்த 10 தினங்களுக்கு மேலாக பலஸ்தீனர்களின் ஆர்ப்பாட்டத்தை தூண்டியது.

இஸ்ரேலின் கெடுபிடிகளுக்கு மத்தியில் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைய மறுத்த முஸ்லிம் வழிபாட்டாளர்கள் வெளியில் வீதிகளில் தொழுகையை நடத்தி வந்தது இஸ்ரேலிய படையுடன் அடிக்கடி மோதலை ஏற்படுத்தியது.

அல் அக்ஸா மீதான பாதுகாப்பு கெடுபிடிகளை அந்த வளாகத்தில் இஸ்ரேல் முஸ்லிம்களின் அந்தஸ்த்தை குறைக்கும் முயற்சி என பலஸ்தீனர்கள் கருதுகின்றனர். அல் அக்ஸா வளாகத்தை டெம்பிள் மெளண்டன் என்று அழைக்கும் யூதர்கள் அங்கு தமது பண்டைய கோவில்கள் இருந்ததாக நம்புகின்றனர்.

இந்நிலையில் இஸ்ரேல் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளில் இருந்து வாபஸ் பெற்றதை அடுத்து பலஸ்தீனம் எங்கும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

இளைஞர்கள் வட்டமாக நின்று பாட்டுப்பாடி நடனமாடி தமது மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளனர். அதேபோன்று வீதிகளில் மக்கள் வாகனங்களில் ஒலி எழுப்பியும் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

“அல் அக்ஸா பள்ளிவாசலில் இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தியதை தவிர கடந்த 12 நாட்களாக ஒருவரும் உறங்க அல்லது வேறு எந்த வேலையையும் செய்யவில்லை” என்று கொண்டாட்டத்தில் ஈடுபடும் பலஸ்தீனர் ஒருவர் குறிப்பிட்டார்.

கடந்த ஒரு வாரத்திற்கு மேல் இடம்பெற்ற மோதல்களில் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதோடு பலஸ்தீனர் ஒருவரின் கத்திக் குத்து தாக்குதலில் மூன்று இஸ்ரேலியர் பலியாகினர்.

இதன்போது இஸ்ரேலிய படை யின் தாக்குதல்களில் 1,000க்கும் அதிகமான பலஸ்தீனர்கள் காயமடைந்தனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + five =