லண்டன் திரைப்பட விழாவில் பாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை பற்றிய சினிமா


பாகிஸ்தான் விளையாட்டு வீராங்கனை மரியா துர்பாகை (26). அந்நாட்டு ஸ்குவாஷ் சாம்பியன் ஆன அவர் அங்குள்ள வசிரிஸ்தான் பகுதியை சேர்ந்தவர்.

இது தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்தது. இவர் 4 வயது சிறுமியாக இருந்த போது வசிரிஸ்தான் தலிபான் தீவிரவாதிகள் வசம் இருந்தது.

அவர்கள் பெண்களுக்கு எதிரான சட்டம் கொண்டு வந்தனர். பெண் குழந்தைகள் கல்வி கற்க கூடாது. பள்ளிக்கு செல்லக்கூடாது என்பன போன்ற தடைகள் விதிக்கப்பட்டன.

இவரது தந்தை ‌ஷம்சுல் கயூம் வாஷிர். இவர் ஆசிரியராக பணிபுரிந்தார். இதற்கிடையே சிறுமி ஆக இருந்த மரியா துர்பாகையின் விளையாட்டு ஆர்வத்தை அறிந்த அவர் அவருக்கு ஊக்கம் அளிக்க விரும்பினார்.

எனவே தனது மகளை சிறுவன் போன்று வளர்த்தார். அவரது உடைகள் முழுவதும் எரிக்கப்பட்டன. தலை முடி முழுவதும் குறைத்து சிறுவர்கள் போன்று சிகை அலங்காரத்தை மாற்றினார்.

மரியா துர்பாகை என்ற பெயர் செங்கிஸ்கான் என மாறியது. அதன் பின்னர் தொடர்ந்து விளையாட்டு பயிற்சி பெற்றார். குறிப்பிட்ட பருவம் வந்ததும் அவர் பெண் என தெரிந்து விட்டது.

அதன் பின்னர் தலிபான் தீவிரவாதிகளிடம் இருந்து அவரது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் வந்தது. இருந்தாலும் தொடர்ந்து அவர் ஸ்குவாஷ் விளையாட்டில் மிகவும் ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றார்.

அதை தொடர்ந்து பாகிஸ்தான் அதிபராக இருந்த பர்வேஷ் மு‌ஷரப்பிடம் இவர் சர்வதேச ஜுனியருக்கான விருது பெற்றார். இவரது வாழ்க்கை ‘கேர்ன் அன்பவுண்டு’ என்ற பெயரில் சினிமா படமாக தயாரிக்கப்பட்டு லண்டன் திரைப்பட விழாவில் ஒளிபரப்பப்பட்டது.

இதற்கிடையே தலிபான்களின் மிரட்டல் அதிகரிக்கவே அவர் வீட்டுக்குள்ளேயே முடங்கி அங்கு ஸ்குவாஷ் பயிற்சி பெற்றார். 2011-ம் ஆண்டு கனடா சென்று முன்னாள் சாம்பியன் ஜோனாதன் என்பவரிடம் பயிற்சி பெற்றார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *