உலகிலேயே முதன் முதலாக நெதர்லாந்தில் இரு சக்கர வாகனங்களுக்கான சூரிய மின்சக்தி சாலை


 நாளுக்கு நாள் பெருகிக்கொண்டே வரும் உலகின் மின்சாரத் தேவையைப் பூர்த்தி செய்ய போதிய மின் உற்பத்தி நிலையங்கள் இல்லை. அதனால் மின்சாரச் சிக்கனத்தின் அவசியம் வலியுறுத்தப்படுகிறது. மேலும் அனல்மின் நிலையங்கள், அணுமின் நிலையங்கள், நீர் மின்சக்தி நிலையங்கள் தவிர்த்து மின் உற்பத்தி செய்ய மாற்று ஆதாரங்களை நாடுவது குறித்து இப்போது விழிப்புணர்வு ஏற்பட்டு வருகிறது.

அதாவது உயிரியல் மின்சக்தி நிலையம், சூரிய மின்சக்தி நிலையம் போன்ற முயற்சிகள் இப்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இம்மாதிரியான மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து கிடைக்கும் மின்சக்தி அவ்வளவு அதிகம் இல்லை என்றாலும், குறைந்தபட்சம் அந்தந்த வீட்டுத் தேவைகளைப் பூர்த்திசெய்யும் என எதிர்பார்க்கலாம். இதனால் நமது நாட்டிலும் வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தித் தகடுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் உலகிலேயே முதன் முதலாக நெதர்லாந்தில் இரு சக்கர வாகனங்களுக்கான சூரிய மின்சக்தி சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது சாலையில் சூரிய மின்சக்தித் தகடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சாலை ஆம்ஸ்டர்டாம் நகரின் புறநகர்ப் பகுதியான க்ராமினியையும் வொம்மர்வீரையும் இணைக்கிறது. 70 மீட்டர் நீளமுடைய இந்தச் சாலை நவம்பர் 12 அன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காகத் திறக்கப்பட்டது.

நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சைக்கிள் பயணிகள் இந்தச் சாலையைப் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் சாலைக்கு நெதர்லாந்தின் பயன்பாட்டு அறிவியல் ஆராய்ச்சிக் கழகம்,சோலா சாலை (SolaRoad)’ எனப் பெயரிட்டுள்ளது. கான்கிரீட் ப்ளாக்குகளின் உள்ளே சோலார் செல்கள் வரிசை வரிசையாக அமைக்கப்பட்டுள்ளன. இந்த பிளாக்குகளை அப்படியே மண்ணில் பதித்து ஒன்றுடன் ஒன்றை இணைக்கிறார்கள். பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்ட பயணிகள் பலருக்கும் இந்தச் சாலை உபயோகமாக இருக்கும் என நெதர்லாந்து பயன்பாட்டு அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *