உலகளவில் ஜப்பான் நிறுவனங்கள் 3 மில்லியன் கார்களைத் திரும்பப் பெற்றுள்ளது


உலகெங்கிலும் உள்ள வாகன தயாரிப்புத் தொழிற்சாலை நிறுவனங்களிடத்தில் சமீபகாலமாக தயாரிப்புக் குறைபாடுகளை முன்னிட்டு அவர்கள் விற்பனை செய்த வாகனங்களைத் திரும்பப் பெறுவது அதிகரித்து வருகின்றது.

அமெரிக்காவின் பிரபலமான ஜிஎம் மோட்டார்சிலிருந்து ஜப்பானின் ஹோண்டா வரை அனைத்து பிரபல நிறுவனங்களுமே இதற்கு விதிவிலக்கில்லை. இன்று வெளியான ஒரு அறிக்கையில் உயிர் பாதுகாப்பிற்காகப் பொருத்தப்பட்ட ஏர்பேக் எனப்படும் காற்றுப்பைகளில் தீப்பிடிக்கும் கோளாறு ஏற்படுவதால் அதனை சரிசெய்ய உலகளவில் ஜப்பான் நிறுவனங்கள் 3 மில்லியன் கார்களைத் திரும்பப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் கடந்த 2000 ஆண்டு ஆகஸ்டிலிருந்து 2005-ம் ஆண்டு டிசம்பர் வரை தயாரிக்கப்பட்ட 20,33,000 கார்களை ஹோண்டா நிறுவனம், திரும்பப் பெற்றுள்ளது. இவற்றில், ஒரு மில்லியன் கார்கள் வட அமெரிக்காவிலும், 6,68,000 கார்கள் ஜப்பானிலும் விற்கப்பட்டுள்ளன. இதேபோல் மஸ்டா மற்றும் நிஸ்ஸான் நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான வாகனங்களைத் திரும்பப் பெற்றுள்ளன. டொயோட்டாவும் இதே நிலையை முன்னர் எதிர்கொண்டது.

ஜப்பானின் டகடா கார்ப்பரேஷனே இந்த ஏர்பேகுகளை தயாரித்துள்ளது. இவர்களுக்கான தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க நிறுவனம் தங்களது தவறுக்காக வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொண்டு இந்தத் தவறு இனிமேல் நடக்காமலிருக்க முயற்சிகள் மேற்கொள்ளுவதாகவும் உறுதிமொழி அளித்துள்ளது.

இந்த அறிவிப்புகளினால் ஜப்பானின் பங்கு சந்தை வர்த்தகத்தில் இன்று ஹோண்டாவின் பங்குகள் சரிந்தும், டகடாவின் பங்குகள் உயர்ந்தும் காணப்பட்டதாக செய்திகள் தெரிவித்தன.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *