அடுத்தடுத்து ஒரே ஆஸ்பத்திரியில் கணவன்- மனைவி உயிர் இழந்த சம்பவம்


அமெரிக்காவைச் சேர்ந்த தம்பதி நஷ்வில்லி (வயது 88). இவரது மனைவி டோலரெஸ் (83). நஷ்வில்லி கொரியா போரின்போது அமெரிக்க படையில் பணியாற்றினார். அப்போது இருவரும் கடிதங்கள் வாயிலாக காதலித்துக் கொண்டனர். படைப்பிரிவில் இருந்து நஷ்வில்லி ஓய்வு பெற்றதும் இருவரும் சேர்ந்து வாழ்ந்தனர்.

இவர்களுக்கு 2 குழந்தைகள், 3 பேரக் குழந்தைகள், 8 கொள்ளு பேரக்குழந்தைகள் உள்ளனர். அவர்களுடன் நஷ்வில்லி தம்பதி 64 ஆண்டுகளாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் 88 வயதாகும் நஷ்வில்லிக்கு சிறுநீரகம் செயலிழப்பு ஏற்பட்டது. இதற்காக வாஷிங்டனில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மனைவியும் அருகில் இருந்து கணவருக்கு பணிவிடைகள் செய்தார்.

இந்த நிலையில் மனைவி டோலரெஸ்க்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரும் அதே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முதலில் இருவரையும் தனித்தனி அறையில் வைத்து கவனித்து வந்தனர். பின்னர் டாக்டர்கள் ஒரே அறையில் அனுமதித்தனர். ஆஸ்பத்திரி படுக்கையிலும் நஷ்வில்லி தனது மனைவி கையைப்பிடித்தபடி இருந்தார்.

அவர்களது திருமண வாழ்க்கையின் 64-ம் ஆண்டு நிறைவு நாள் நெருங்கி வரும் நிலையில் கடந்த 9-ந்தேதி இரவு 9.10 மணிக்கு டோலரெஸ் உயிர் பிரிந்தது.

இந்த நிலையில் மறுநாள் மாலை 4 மணிக்கு கணவர் நஷ்வில்லி உயிரும் பிரிந்தது. அடுத்தடுத்து ஒரே ஆஸ்பத்திரியில் கணவன்- மனைவி உயிர் இழந்த சம்பவம் உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *