உலகிலேயே பசுபிக் கடலை கடந்த முதல் பெண் -சாதனை


அமெரிக்காவை சேர்ந்த சோனியா என்கிற பெண் பசுபிக் கடலை படகு ஒன்றில் தன்னந்தனியே 9,656 கி.மீ., துடுப்பு போட்டு கடந்த உலகிலேயே முதல் பெண் மற்றும் மூன்றாவது நபர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
சோனியா பவும்ஸ்டீன் 30 படகில் ஜப்பானின் சோஷி மரினா கடலில் ஆரம்பித்து ஆறு மாதங்கள் தன்னந்தனியே பயணித்து சான் பிரான்சிஸ்கோவை அடைய வேண்டுமென்று திட்டமிட்டார்.

பாய்மரம் எதுவுமில்லாத 23 அடி நீளமும் ,300 கிலோ எடையும் கொண்ட படகில் துடுப்புப் போட்டுக்கொண்டே அவர் பயணத்தை துவக்கினார். படகில் 544 கிலோ குளிரூட்டிய உலர்ந்த உணவுகளையும், 180 உயர் புரதச் சத்துள்ள நீர் ஆகாரங்களையும் தேவையான அளவு ஆலிவ் எண்ணெயையும் சோனியா வைத்திருந்தார். கடல்நீரை குடிநீராக்கும் மின்சார கருவி ஒன்றின் மூலம் தண்ணீரை கடல் நீரிலிருந்து தயாரித்துக் கொண்டார். கழிவு வசதிகளுக்கு ஒரு வாளியை பயன்படுத்தி கொண்டார்.

 

இந்தப் பயணம் முழுவதையும் அவரது குழுவினர் ஜி.பி.எஸ்., கருவி மூலம் கண்காணித்து வந்தனர். அவசர உதவிக்கு அழைக்க சோனியாவுக்கு ஒரு பீகான் விளக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் அவர் எந்த உதவியும் கோராமல் 9,656 கி.மீ., படகில் கடந்து தன் பயணத்தை வெற்றிகரமாக முடித்து சாதனையை படைத்துள்ளார்.

 

இதுவரையிலும் 16 பேர் பசுபிக் கடலை கடக்க முயற்சித்துள்ளனர். அதில் பிரான்சை சேர்ந்த ஜெரார்ட் டி அபோவில், இம்மானுவேல் கோயிண்டர் ஆகிய இரு ஆண்கள் மட்டுமே கடந்து சாதனை படைத்துள்ளனர். பசுபிக் கடலை கடந்த முதல் பெண்மணி என்ற பெருமையை அடைந்துள்ள சோனியாவிற்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *