`பங்காளி… வந்துட்டே இருக்கேன்!’ – ‘மீண்டும் ஹீரோ’ வடிவேலு – சுவாரசியப் பதிவு


‘தலைநகரம்’ படத்தில், `எனக்காடா எண்டு கார்டு போடுறீங்க… எனக்கு எண்டே கிடையாதுடா’ என்று வடிவேலு பேசும் டயலாக் செம ஃபேமஸ். மதுரையிலேயே முகாமிட்டிருந்தவர், தற்போது சினிமா படிப்பிடிப்புக்குத் தயாராகிவிட்டார்.
Vadivelu

வடிவேலுவின் நகைச்சுவைத் திறமையை புத்திசாலித்தனமாகப் பயன்படுத்திக்கொண்டவர், ‘என்னம்மா கண்ணு’ இயக்குநர் ஷக்தி சிதம்பரம். வடிவேலுவை பிரத்யேக ஹீரோவாக வைத்து கதை எழுதி, அதற்கு ‘பேய் மாமா’ என்று டைட்டிலையும் கவுன்சிலில் பதிவுசெய்திருந்தார். பூஜைபோட்டு, படப்பிடிப்பை தொடங்கும் நேரத்தில், ‘வடிவேலுவை ஒப்பந்தம் செய்யாதீர்’ என்று தமிழ் தயாரிப்பாளர்கள் சங்கம் சிவப்புக்கொடி காட்டியது. ஷக்தி சிதம்பரம் ஷாக்கானார்.

வடிவேலுவுக்கு பதில் யோகிபாபுவை ஒப்பந்தம்செய்து அட்வான்ஸ் பணமும் கொடுத்துவிட்டார். இதற்கிடையில், ‘ப்ரெண்ட்ஸ்’ படத்தின் நேசமணியான வடிவேலு, உலக அளவில் டிரெண்டானார். ‘தயாரிப்பாளர்கள் சங்கத்துல என்னை வாழவிடாம அழிக்கப் பாக்குறாங்க’ என்று தன்னுடைய ஆதங்கத்தை தெரிவித்திருந்தார், வடிவேலு. சினிமா வாழ்வில், இருந்த தடைகளை எல்லாம் பேச்சுவார்த்தை வாயிலாக வைகைப் புயல் தீர்வு கண்டுவிட்டதாகச் சொல்கிறார்கள்.

வடிவேலு

கடந்த சில மாதங்களுக்கு முன்பு, வடிவேலுவை ஹீரோவாக வைத்து முழுநீள காமெடி படத்துக்கான கதை, திரைக்கதை, வசனத்தை உருவாக்கி இருக்கிறார், இயக்குநர் சுராஜ். ‘தலைநகரம்’ படத்தில் ‘நாய் சேகர்’ கதாபாத்திரத்தையும் ‘மருதமலை’ படத்தில் ‘ ஏட்டு ஏகாம்பரம்’ கேரக்டரையும் யாராலும் மறக்க முடியாது. அதனை முன்மாதிரியாக வைத்து, முழுக்க முழுக்க சிரிக்கவைக்கும் நோக்கத்தோடு வடிவேலுவுக்காக பிரத்யேகமாக கதை ஒன்றை உருவாக்கியுள்ளார், சுராஜ். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.

மீண்டும் ஃபீனிக்ஸ் பறவையாகத் தோன்றி தமிழ் ரசிகர்களை கவலை மறந்து சிரிக்க வைக்க இருக்கிறார் வடிவேலு. மதுரையில் இருந்த அவரிடம் பேசினோம். “ இப்போதைக்கு பேட்டி எதுவும் வேணாம் பங்காளி. அடுத்த மாசம் ஷூட்டிங் ஸ்டார்ட். அதுக்கப்புறம் மீடியா வெளிச்சத்துக்கு வர்றேன். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. வந்துகிட்டே இருக்கேன்” என்றார் உற்சாகத்துடன்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *