ஸ்ரீ வரலட்சுமி விரதம் இருங்கள் – நல்வாழ்வு கிடைக்கும்!


செல்வத்திற்கு அதிபதி லட்சுமிதேவி. லட்சமி தேவியின் திரு அவதாரம் துவாதசி வெள்ளிக்கிழமை ஆகும். ஆகவே அன்று லட்சுமி தேவியைப் பூஜை செய்பவர் லட்சுமியின் அருளை பரிபூர்ணமாகப்பெறுவார். இந்த வரலட்சுமி விரதத்தைச் செய்து அடுத்தவர்களையும் வாழ வைத்த சியாம பாலாவின் சரிதம் இது.

பத்ரச்ரவஸ் என்ற மன்னன் உத்தமமான விஷ்ணு பக்தன். கற்புக்கவியான சுரசந்த்ரிகா அவன் மனைவி. இந்தத் தம்பதிகளின் மகள் சியாமபாலா. தம் செல்ல மகளை, சக்கரவர்த்தியான மாலாதரன் என்பவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். சில காலம் சென்று ஒருநாள், செந்தாமரைச்செல்வியான லட்சுமிதேவி, வயதான சுமங்கலி வேடத்தில் சுரசந்திரிகா அரண்மனைக்குள் நுழைந்தாள்.

மகளைப்புகுந்த வீடு அனுப்பிவிட்டுத் தனியாக இருந்த சுரசந்த்ரிகாவிடம், அன்போடு வரலட்சுமி விரதத்தை விரிவாகக்கூறி அதைக் கடைபிடிக்கும் படி சொன்னாள். வந்து உபதேசம் செய்த லட்சுமிதேவியை, “யாரோ யாசகம் கேட்க வந்தவள்” என்று நினைத்து, கன்னத்தில் அறைந்து அவமானப்படுத்தி வெளியே விரட்டிவிட்டாள்.

இப்படி அரசியால் விரட்டப்பட்ட லட்சுமிதேவியை அரசியின் மகளான சியாமபாலா சமாதானப் படுத்தினாள். அத்துடன் லட்சுமி தேவியிடம் இருந்து வரலட்சுமி விரதத்தை விரிவாகக் கேட்டு உபதேசமும் பெற்றாள். பக்தியுடன் விரத்த்தை கடைப் பிடித்தாள். விரத மகிமையால் சிறந்த செல்வம் பெற்றாள்.

இதே நேரம், இவள் யெற்றோர்களோ லட்சுமிதேவியை அவமானப் படுத்தியதால் எல்லாவற்றையும் இழந்து ஏழைகளாக ஆனார்கள். விவரம் அறிந்த சியாமபாலா, ஒருகுடம் நிறைய தங்கத்தைத் தனது பெற்றோர்கள் வறுமைதீர அவர்களுக்கு அனுப்பினாள். அனுப்பிய தங்கம் பெற்றோர்களிடம் போனதும் (அவர்கள் தீவினையால்) அது கரியாக ஆகிவிட்டது. இதை அறிந்த சியாமபாலா தன் தாயான சுரசந்த்ரிகா விடம் வரலட்சுமி விரதத்தைச் சொல்லிப் பூஜை செய்யும்படி கூறினாள்.

அவளும் மகள் சொன்னபடியே வரலட்சுமி விரதத்தைக் கடைப்பிடித்து, பூஜை செய்து அழிந்த செல்வங்களை எல்லாம் மீண்டும் பெற்று சுகவாழ்வு வாழ்ந்தாள். ஆகவே, பெண்மணிகள் எல்லோரும் இந்த விரதத்தைக் கடைப்பிடித்து சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு வாழ வேண்டுகிறோம்.

 

நன்றி : ஜஸ்டின் | தினபூமிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *