விக்னேஷ்வரன் ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!


 

வடக்கு, கிழக்கு மாகாண முன்னேற்றப் பணிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழு தொடர்பில் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாண முன்னேற்றப் பணிகள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட 48 பேர் கொண்ட ஜனாதிபதி செயலணியில் வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஷ்வரனும் இடம்பெற்றுள்ளார்.

ஜூன் 14 ஆம் திகதி அனுப்பப்பட்ட ஜனாதிபதியின் நியமனக்கடிதம் ஜூலை 5 ஆம் திகதியே அதாவது 21 நாட்களின் பின்னரே தனக்கு கிடைத்ததாக வட மாகாண முதலமைச்சர், ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தன்னையும் தமது பிரதம செயலாளரையும் இந்த செயலணியில் உள்வாங்கியமை தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ள வட மாகாண முதமைச்சர், மத்திய அமைச்சர்களும் அவர்களின் அமைச்சின் செயலாளர்களும் இந்த செயலணியில் சேர்க்கப்பட்டுள்ள போதிலும், வட மாகாண அமைச்சர்கள் விடுபட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொருளாதார அபிவிருத்திகளை திணிப்பதன் மூலம் தேசிய ஐக்கியத்தை ஏற்படுத்த முடியாது என சி.வி. விக்னேஷ்வரன் ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வானது முதலில் ஏற்படுத்தப்பட்ட பின்னரே அபிவிருத்திப் பணிகள் செயற்படுத்தப்பட வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

போர் முடிவடைந்து 9 வருடங்கள் கடந்துள்ள போதிலும் வடக்கு, கிழக்கு மக்களின் அடிப்படை அரசியல் பிரச்சினைகளைத் தொடர்ந்து வந்துள்ள மத்திய அரசாங்கங்கள் தீர்க்கவில்லை என்ற விடயத்தை மூடி மறைக்க முடியாது எனவும் வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.

வடக்கு, கிழக்கில் உள்ள காணிகள் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்படுவதாகவும் ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மாட்சிமை பொருந்திய அமைச்சர்கள், ஆளுநர்கள், அமைச்சின் செயலாளர்கள், படையினரை உள்ளடக்கிய ஒரு உயர் மட்ட செயலணியில் தானும் ஒரு பொருட்டாக இணைந்து கொள்வதை தேவையற்ற ஒன்றாகவே கருதுவதாக சி.வி. விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

தமது கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் அண்மையில் கூறியவாறு இந்த வருட முடிவிற்குள் அரசியல் பிரச்சினைகள் யாவும் தீர்க்கப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே அபிவிருத்தி செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் எனவும் வட மாகாண முதலமைச்சர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *