கொத்தடிமை மீட்பு பணிக்கு உதவிய விஜய்சேதுபதி


தனியார் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கி வரும் விஜய்சேதுபதி, தொத்தடிமை மீட்பு பணிக்கு உதவியிருக்கிறார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் சமூகத்தில் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளாமல் நல்லது செய்பவர்களைக் கண்டறிந்து கௌரவப்படுத்தும் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. நடிகர் விஜய்சேதுபதி அதன் தொகுப்பாளராக பங்கேற்று நடத்தி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கடந்த மாதம் பச்சையம்மாள் என்ற இளம்பெண் கலந்து கொண்டார். செங்கல் சூளையிலும் முறுக்கு கம்பெனிகளிலும் 10 வருடங்களாக கொத்தடிமையாக இருந்து வெளி உலகமே தெரியாமல் வளர்ந்த பச்சையம்மாள் அங்கு நடைபெறும் கொடுமைகளை அதிகாரிகளுக்கு ரகசியமாக எடுத்துச்சொல்லி கொத்தடிமையாக இருந்தவர்களை மீட்டெடுத்தார்.

அப்படி கொடுமைப்படுத்திய முதலாளிக்கு 11 ஆண்டுகள் சிறை தண்டனை வாங்கி கொடுத்தார். தன்னைப் போல் கொத்தடிமைகளாக எங்கெங்கு மக்கள் சிக்கித்தவிக்கிறார்களோ அவர்களை மீட்டு அவர்களுக்கு மறுவாழ்வு தருவதை தனது லட்சியமாக கொண்டு, செயல்பட்டு வருகிறார். பச்சையம்மாளிடம் விஜய்சேதுபதி உங்களுக்கு என்னென்ன வேண்டும்? என்று கேட்டார்.

அதற்கு, ஒரு ஆபிஸ் போட வேண்டும். அதில் 3 கம்பியூட்டர்கள் வேண்டும். ஒரு கார் வாங்கவேண்டும், என்றார். கார் எதற்காக? என்று விஜய்சேதுபதி கேட்டார்? என்னை மாதிரி, பாதித்தவர்களை மீட்பதற்காக நாங்கள் இப்போது வாடகைக் காரைத்தான் எடுத்துச் செல்வோம்.

அதிகமாக செலவாகிறது. காரணம் சொன்னால் டாக்சிக்கார்கள் வர பயப்படுகிறார்கள். அதனால் சொந்தமாக ஒரு கார் இருந்தால் உடனே, பெட்ரோலை போட்டுட்டு நாமே போய் சீக்கிரம் மீட்டு வந்துவிடலாம் என்றார்.

இதை கேட்டு நெகிழ்ந்து போன விஜய்சேதுபதி, பரவாயில்லை, அந்தக் காரை நானே வாங்கித் தருகிறேன். கம்ப்யூட்டர் மட்டும் ஆபிஸ் போடுறதுக்கும், நானே பணம் தருகிறேன், நீங்க தைரியமா பண்ணுங்க என்றார்.

விஜய்சேதுபதி அந்த மேடையிலேயே, 5 லட்சம் ரூபாய்க்கான காசோலையை அந்த பெண்ணிடம்ட் கொடுத்தார். அதைக்கண்டு, அந்த பெண் ஆனந்தக்கண்ணீர் வடித்தார். அடுத்து தனது வாக்குறுதிப்படி கொத்தடிமைகளை மீட்பதற்காக ஒரு சொகுசு காரை வாங்கி அதனை கொத்தடிமை தொழிலாளர் மறுவாழ்வு சங்கத்திடம் வழங்கினார்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *