விஜய் சேதுபதி இவ்வளவு ஆர்வம் காட்டுவது கவலை தருகிறது; விகடனுக்கு தீபச்செல்வன் 


முரளி வெறுமனே விளையாட்டு வீரர் மட்டும் இல்லை என்பதை விஜய்சேதுபதிக்கு தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்கள் யாரும் இன்னும் எடுத்துச் சொல்லாதது ஏன்?

 Muralitharan - Vijay Sethupathi

Muralitharan – Vijay Sethupathi

“முரளிதரன் பட விவகாரத்தில் தமிழ் எழுத்தாளர்களும் ஈழ உணர்வாளர்களும் மௌனம் காப்பதுதான் ஏன்?” என ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திரப் பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு, ‘800’ என்கிற பெயரில் திரைப்படமாக வெளிவரவிருக்கிறது. அதில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்கவிருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

Vijay Sethupathi
Vijay Sethupathi
அறிவிப்பு வந்தவுடனேயே, “ஈழத்தமிழர்களுக்கு எதிராகவும் சிங்கள ஆட்சியாளர்களுக்கு ஆதரவாகவும் கருத்துத் தெரிவித்துவரும் முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது” என ஈழத்தமிழர்களும் தமிழகத்தைச் சேர்ந்த ஈழ உணர்வாளர்களும் கோரிக்கை விடுத்தனர். “யாரையும் காயப்படுத்தும் காட்சிகளில் நடிக்க மாட்டேன்” என விஜய் சேதுபதி அதற்குப் பதிலளித்திருந்தார்.

சமீபத்தில், இலங்கை தலைநகர் கொழும்புவில் கோத்தபய ராஜபக்‌ஷே தலைமையிலான நிகழ்ச்சி ஒன்றில் முரளிதரன் கலந்து கொண்டு, “2009 -ல் விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்ட நாளே தனது வாழ்வில் முக்கியான நாள்” எனக் கருத்துத் தெரிவித்திருந்தார். இது, ஈழ உணர்வாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியது.

Gotabhaya Rajapaksa
Gotabhaya Rajapaksa

அதைத் தொடர்ந்து, ஈழ எழுத்தாளர் தீபச்செல்வன், “காஷ்மீர் மக்களுக்காகவும் தமிழகத்தின் விளிம்புநிலை மக்களின் பிரச்னைகளுக்காகவும் தீர்க்கமாகக் குரல் எழுப்பும் விஜய் சேதுபதி, ஈழத்தமிழர்களைப் புண்படுத்தும் இந்த விஷயத்தில் மட்டும் நழுவுவது ஏன்? ” என பத்திரிகை ஒன்றில் கட்டுரை எழுதியிருந்தார். அந்தக் கட்டுரைக்கு எதிர்வினையாக தொடர்ச்சியாக அவருக்கு மிரட்டல்களும் ஆபாச அர்ச்சனைகளும் வந்தபடி இருக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாக, எழுத்தாளர் தீபச்செல்வனிடம் பேசினோம்,

“முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றுப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார் என்கிற அறிவிப்பு வந்த நாள் முதலாகவே அதை எதிர்த்து வருகிறோம். ஒரு கிரிக்கெட் வீரராக முத்தையா முரளிதரன் கொண்டாடப்படக் கூடியவராக இருந்தாலும், அவரது வாழ்வும் கருத்துகளும் ஒடுக்கப்பட்ட, வஞ்சிக்கப்பட்ட ஈழ இனத்திற்கு எதிரானது. ஈழ மக்களைக் கொன்றொழித்த ராஜபக்‌ஷே தரப்பு வேட்பாளரான கோத்தபய ராஜபக்‌ஷேவின் தேர்தல் மேடைகளில் வலம்வரும் முரளிதரன் போற்றத்தக்க ஒரு மனிதரில்லை.

Theepaselvan
Theepaselvan

தனது உழைப்பால் முன்னேறி இன்று தமிழ்த்திரை உலகில் தனக்கென தனி அடையாளத்தோடு இருக்கும் நடிகர் விஜய் சேதுபதி, முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்கக் கூடாது எனக் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவரோ, `சமூக ஒற்றுமையை முன்னிறுத்துகிற படம்தான்; யாரையும் காயப்படுத்தும் வகையில் நடிக்கமாட்டேன்’ என ஆஸ்திரேலியா வானொலி ஒன்றில் கூறியிருந்தார்.

எங்களுடைய பிரச்னை, திரைப்படத்தின் மூலமாகச் சொல்லப்படும், கருத்துகள் எங்கள் மனதை புண்படுத்தும் என்பதல்ல. மாறாக, திரைப்படம் எடுத்து போற்றத்தக்க வகையில் அவரின் வாழ்வு இல்லை என்பதே. அதனால்தான் விஜய்சேதுபதி நடிக்கக்கூடாது என மீண்டும் வலியுறுத்தினேன். அதைத் தொடர்ந்து, ராஜபக்‌ஷேவின் ஆதரவாளர்களும் முரளிதரனின் ஆதரவாளர்களும் எனக்குத் தொடர்ச்சியாக கொலை மிரட்டல்கள் விடுத்து வருகின்றனர். ‘அடுத்த எங்களின் ஆட்சிதான், அப்போது இதற்கான பதிலைக் கூறவேண்டிவரும் ‘ எனவும் மிரட்டவும் செய்கிறார்கள்.

Rajapaksa
Rajapaksa

விஜய் சேதுபதி நடிக்கக் கூடாது என நான் சொல்வதை, முரளிதரனுக்கு எதிரான ஒன்றாக மட்டும் சிங்கள அரசியல் தலைவர்கள் பார்க்கவில்லை. அவர் ‘இலங்கையை ஆட்சி செய்த பெரும் அரசியல்வாதிகளுக்கு ஆதரவானவர்’ என்ற அடிப்படையில் நாம் அவரை விமர்சிக்கும்போது, அவர்கள் தங்கள் மீதான விமர்சனமாகவே அதைப் பார்க்கிறார்கள்.

அத்துடன் முரளி, ஈழத்தமிழர்கள் விஷயத்தில் பேசிய விஷயங்கள் இலங்கை அரசை, இலங்கையில் ஆட்சி செய்த குற்றவாளிகளை பாதுகாக்கும் வகையிலான பேச்சுகள். எனவே முரளியை நாம் எதிர்ப்பதை, அவர்களை எதிர்ப்பதாகத்தான் பார்க்கிறார்கள். புலிகளுக்கு எதிரான, ஈழ மக்களின் வலியைக் கொச்சைப்படுத்தும் ஒருவரின் கதாபாத்திரத்தில் நடிப்பதில் விஜய் சேதுபதி இவ்வளவு ஆர்வம் காட்டுவது கவலை தருகிறது.

Vijay Sethupathi - Muralitharan
Vijay Sethupathi – Muralitharan

முரளி வெறுமனே விளையாட்டு வீரர் மட்டும் இல்லை என்பதை விஜய்சேதுபதிக்கு தமிழகத்தில் உள்ள ஈழ உணர்வாளர்கள் யாரும் இன்னும் எடுத்துச் சொல்லாதது ஏன்? இந்த விஷயத்தில் சக எழுத்தாளர்களும் தமிழ்நாடு உட்பட உலகெங்கும் வாழும் ஈழ உணர்வாளர்களும் மௌனம் காப்பது ஏன் என்பதுதான் தெரியவில்லை” என்று கவலை தெரிவித்தார்.

நன்றி: விகடன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *