சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழைந்த 17 வியட்நாமியர்கள் தொடர்பில் வியட்நாம் விசாரணை!


கடந்த ஆகஸ்ட் மாதம், வியட்நாமிலிருந்து கடல் வழியாக 29 நாள்கள் பயணித்து ஆஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 17 வியட்நாமியர்கள் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்தனர். தற்போது, இச்சம்பவம் தொடர்பான விசாரணையை வியட்நாம் தொடங்கியிருக்கிறது.

இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். Quang Binh எனும் வியட்நாமின் மத்திய மாகாணத்தில் டிரான் நகோக் சௌ (வயது 49) மற்றும் நகுயுன் டிருங் கியன்(39) என்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். படகு முதலாளியான பஹம் தீ நஹன்(35) வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இருவரும் ஆஸ்திரேலியாவுக்கான பயணத்தை முன்னின்று ஒருங்கிணைத்தவர்கள் எனக் கூறப்படுகின்றது.

இப்பயணத்துக்காக 73,128 டாலர்கள் மதிப்புடைய படகை படகு முதலாளியுடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர். பின்னர், இவர்களுடன் மேலும் 14 வியட்நாமியர்களை இணைத்துக் கொண்டு மொத்தம் 17 பேர் ஆஸ்திரேலிய பயணத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த 14 பேரும் தலா சுமார் 5 லட்சம் ரூபாய் தங்கள் பயணத்துக்கு கொடுத்துள்ளனர்.

கடந்த ஜூலை 29 வியட்நாமின் துறைமுகத்திலிருந்து கிளம்பிய இவர்கள் 29 நாட்களுக்கு கடலில் பயணித்து ஆகஸ்ட் 26ம் தேதி ஆஸ்திரேலியாவை அடைந்துள்ளனர். இவர்கள் கரையை அடைந்துவிட்ட போதிலும், ஆஸ்திரேலிய அதிகாரிகளால் கண்டறியப்பட்டு நாடுகடத்தப்பட்டிருந்தனர்.

வெளிநாடுகளுக்கு ஆட்களை அழைத்து செல்ல ஒருங்கிணைத்தது, நிர்ப்பந்தித்தது தொடர்பாக இவர்களிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது. இக்குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில் இவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும்.

கடந்த 2013 முதல் கடுமையான எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வரும் ஆஸ்திரேலிய அரசு, படகு வழியாக ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் முயற்சியினை முழுமையாக நிராகரித்து அவ்வாறு வருபவர்களை நாடுகடத்துகின்றது.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *