குழந்தைகளின் உடல்நலனுக்கு அதீத கெடுதலை விளைவிக்கும் மலிவு விலை பிளாஸ்டிக் பொம்மைகள்


ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக்கினால் தயாரிக்கப்படும் பொம்மைகளில் சமீபத்திய பாதுகாப்பு நெறிமுறைகள் பின்பற்றப்படுவதில்லை என்பதால் அவற்றை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு உடல்நலம் சார்ந்த ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது.

தென்மேற்கு இங்கிலாந்திலுள்ள குழந்தை வளர்ப்பகங்கள், பயன்படுத்தப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் விற்பனையகங்கள் மற்றும் வீடுகளிலுள்ள 200 பயன்படுத்தப்பட்ட பொம்மைகளை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இது குறித்து தெரியவந்துள்ளது.

ஐரோப்பிய சுகாதார நிறுவனங்களினால் ஆபத்தை விளைவிக்க கூடிய அளவாக குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகமான அளவு ஒன்பது வகையான ரசாயனங்களையும் ஆய்விற்குட்படுத்தப்பட்ட இருபது பொம்மைகள் கொண்டிருந்ததது.

ஆனால், இது விளைவிக்கும் ஆபத்தை பற்றி மதிப்பிடுவது கடினமானது என்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

“பல ஆண்டுகாலத்திற்கு முன்னர் வரை தயாரிக்கப்பட்ட பொம்மைகளில் இதுபோன்ற ஆய்வுகள் செய்யப்படவில்லை” என்று இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட ப்ளைமௌத் பல்கலைக்கழகத்தை சேர்ந்த ஆண்ட்ரூ டர்னர் கூறுகிறார்.

நீண்டகால நச்சு

ஆய்விற்குட்படுத்தப்பட்ட பொம்மைகளின் பாகங்கள் கார்கள் முதல் ரயில்கள் வரை எவற்றிலிருந்தெல்லாம் எடுத்து பயன்படுத்தப்பட்டுள்ளன என்பதை அறிவதற்காக எக்ஸ்-ரே ஃப்ளோரசன்ஸ் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டதாக சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என்ற சஞ்சிகையில் வெளியிடப்பட்டுள்ள கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பொம்மைகளுமே குழந்தைகளினால் விழுங்கப்படும் அளவுக்கு மிகவும் சிறியளவில் இருந்தது.

குழந்தைகளின் உடல்நலனுக்கு கேடு விளைவிக்கக் கூடிய ஆண்டிமோனிக், பேரியம், ப்ரோமைன், காட்மியம், குரோமியம், லெட் மற்றும் செலினியம் உள்ளிட்ட அபாயகரமான கூறுகள் அந்த பொம்மைகளில் அதிக செறிவில் இருப்பதை கண்டறிந்தனர்.

இந்த ரசாயனங்கள் நீண்ட காலத்திற்கு குறைந்த அளவில் குழந்தைகளிடமே இருக்குமானால் அது மிகப் பெரிய பாதிப்பை உண்டாக்கக் கூடும்,

குழந்தைகள் தங்கள் வாயில் பொம்மைகளை வைத்திருந்தால், இந்த ரசாயனங்கள் அதிக அளவுக்கு வெளிப்படும்.

படத்தின் காப்புரிமைANDREW TURNER

பொம்மைகளில் பயன்படுத்தப்படும் ரசாயனங்களுக்கான அளவாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பொம்மைகளுக்கான நெறிமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளதைவிட அதிகமான அளவு ரசாயனங்கள் ஆய்விற்குட்படுத்தப்பட்ட 26 பொம்மைகளில் 10ல் இருந்ததாக கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக ப்ரோமைன், காட்மியம் அல்லது லெட் போன்றவை இருந்ததாக தெரியவந்துள்ளது.

குறிப்பாக சிவப்பு, மஞ்சள் அல்லது கருப்பு பிளாஸ்டிக்குகள் மோசமான விளைவுகளை ஏற்படுத்த கூடியவை.

“ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொம்மைகள் குடும்பங்களுக்கு ஒரு கவர்ச்சியான விருப்பமாக இருக்கிறது. ஏனெனில், அவை நேரடியாக நண்பர்களிடமோ அல்லது உறவினரிடமிருந்தோ மலிவான விலையிலோ அல்லது தொண்டு விற்பனையகங்கள் , வெளிச்சந்தைகள் அல்லது இணையத்தளங்கள் மூலமாகவோ பெற முடியும்” என்று ஆராய்ச்சியாளரான டர்னர் கூறுகிறார்.

புதிய கட்டுப்பாடுகள் பழைய பொம்மைகளை மறுசுழற்சி செய்வதையோ அல்லது மறுவிற்பனை செய்வதையோ தடுக்கவில்லை என்று அவர் கூறுகிறார்.

“சிறிய மற்றும் வாயில் எளிதாக வைத்துக்கொள்ளக்கூடிய மற்றும் பிரகாசமான நிறமுடைய பிளாஸ்டிக் பொம்மைகள் அல்லது கூறுகளிலுள்ள அபாயங்களை நுகர்வோர் நன்கு அறிந்திருக்க வேண்டும்” என்றும் “இல்லையெனில் அவை குழந்தைகளின் உடல்நலனுக்கு அதீத கெடுதலை இந்த விலை குறைவான மற்றும் வசதிகரமாக இருப்பதாக தோன்றும் இந்த பொம்மைகள் விளைவிக்கும் வாய்ப்புள்ளது” என்றும் அவர் மேலும் கூறுகிறார்.

படத்தின் காப்புரிமைANDREW TURNER

அபாயத்தை அதிகரிக்கிறது

“ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொருட்கள் அவை உற்பத்தி செய்யப்படும்போது அளிக்கப்பட்ட பாதுகாப்பு உத்தரவாதத்தை அளிக்காது” என்று சார்ட்டர்ட் டிரேடிங் ஸ்டாண்டர்ட்ஸ் இன்ஸ்டிடியூட்டை சேர்ந்த மார்க் கார்டினர் கூறுகிறார்.

“மிகவும் பழைய பொம்மைகளை குழந்தைகளுக்கு கொடுக்கும் பெற்றோர்கள் அதன் தரத்தில் காலப்போக்கில் மோசமான மாற்றம் நிகழ்ந்து ஏற்படுத்தக் கூடிய பிரச்சனைகள் குறித்து அறிந்திருக்க வேண்டும்” என்று அவர் கூறுகிறார்.

“தங்களது குழந்தைகளின் மீது அக்கறை கொண்டுள்ள பெற்றோர்கள் இதுபோன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட பொம்மைகளை குழந்தைகளிடம் அளிக்காமலிருப்பதே நல்லது” என்று கார்டினர் கூறுகிறார்.

 

நன்றி : பிபிசி தமிழ்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *