யுத்த வெற்றி யாருக்குச் சொந்தம்? சி.சி.என்


 

ஜனாதிபதி தேர்தலில்  களமிறங்கியிருப்பவர்களில் பிரதான வேட்பாளர்களாக விளங்கும் கோத்தாபய ராஜபக்க்ஷ மற்றும் சஜித் பிரேமதாச ஆகியோர்  யுத்த வெற்றியை பிரதானமாகக் கொண்டு பிரசாரத்தை முன்னெடுப்பதில் அதிக அக்கறை காட்டி வருகின்றனர்.  இது தீவிரமடையும் பட்சத்தில் தேர்தல் பிரசாரங்களில் ஜனநாயகத்தன்மை  இல்லாது போய் விடும் என்பதால் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவும் அறிவித்துள்ளது.

எனினும்  இதை மகிந்த அணியினர் விடுவதாக இல்லை. எந்த தேர்தல் சட்டத்தின் அடிப்படையில் யுத்த வெற்றியை பிரசாரத்தில் பயன்படுத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளத என கேள்வி எழுப்பி சர்ச்சையை கிளப்பிவிட்டுள்ளார் எதிரணி எம்.பியான பந்துல குணவர்தன. இத்தேர்தலில் யுத்த வெற்றி கோஷங்கள் பிரதான இடத்தைப்பிடிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. மகிந்த அணியினருக்கு அதுவே பிரதானமானதாகவும் இருந்தது.

எனினும் ஷாங்ரிலா ஹோட்டலில் பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போது கேள்வி ஒன்றுக்கு வேட்பாளர் கோத்தாபய அளித்த பதிலால் இப்போது யுத்த வெற்றியை ஐக்கிய தேசிய கட்சியினரும் சொந்தம் கொண்டாடிக்கொண்டிருக்கின்றனர். இந்திய ஆங்கில பத்திரிகையின் ஊடகவியலாளர் கோத்தாபாயவிடம் இறுதி யுத்த நேரத்தில் சரணடைந்த , காணாமல் போன சிவிலியன்கள் பற்றிய கேள்விக்கு ‘யுத்தத்தை நான் வழிநடத்தவில்லை  இராணுவத்தளபதியே வழிநடத்தினார்’ என்று பதில் கூறினார் கோத்தாபய. இதற்குப்பிறகு அந்த பதிலை கச்சிதமாக பிடித்துக்கொண்ட சஜித்  ‘போரை வழிநடத்தி வெற்றி கொண்டவர் எம்மோடு இருக்கும் சரத் பொன்சேக்கா என்பதை கோத்தாபய ராஜபக்க்ஷவே ஏற்றுக்கொண்டுள்ளார். இத்தனை நாட்களாக யுத்த வெற்றிக்கு சொந்தம் கொண்டாடியவர்கள் தற்போது உண்மையை கூறியுள்ளார்கள். மட்டுமன்றி முழு நாடுமே இவர்களை நம்பிக்கொண்டிருந்தது.  உண்மைகளை நெடுநாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது’ என சஜித் தொடங்கஸ்லந்தவில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றியிருந்தார்.

இதையடுத்து  யுத்த வெற்றி கதைகள்  தேர்தல் பிரசாரத்தின் ஜனநாயகத்தன்.மையை பாதிக்கும் என்ற முறைப்பாடுகள் எழுந்த  காரணத்தினால் மறுநாளே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய அதை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளும்படி அறிவுறுத்தியிருந்தார்.

மக்களுக்குக் கூறுவதற்கு வேறு ஒன்றுமே இல்லையா?

யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கடந்தாலும் இந்நாட்டில் இருவேறு சமூகங்கள் மத்தியிலும்  சர்வதேசத்தின் பார்வையிலும் யுத்த வெற்றி வெவ்வேறு அர்த்தத்திலேயே நோக்கப்பட்டு வருகின்றது. சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் மக்கள் மத்தியில் இது பயங்கரவாதத்துக்கெதிரான  வெற்றியாகவும் தமிழ் மக்கள் மத்தியில் பல அழிவுகளை தந்த முடிவாகவும் அதே வேளை சர்வதேசத்தின் பார்வையில் போர்க் குற்றங்களை ஏற்படுத்தியதொன்றாகவே பார்க்கப்பட்டு வருகின்றது.

எனினும் 2009 ஆம் ஆண்டிற்குப்பிறகு இந்நாட்டில் இடம்பெற்ற தேர்தல்களில் யுத்த வெற்றி பேச்சுக்கள் இடம்பெறாத பிரசாரக்கூட்டங்களே இல்லை எனலாம். இன்று மக்கள் நிம்மதியாக தமது வாழ்க்கையை முன்னெடுக்க யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டமையே காரணம் என்பது சிங்கள மக்கள் மத்தியில் வேரூன்றி போன  விடயமாகி விட்டது. ஆனால்  உள்நாட்டு கலவரத்திற்கோ அல்லது பக்கத்து நாட்டின் படையெடுப்புக்கோ வெற்றிகரமாக முகங்கொடுத்து நாட்டு மக்களை காப்பாற்றிய பல நாடுகள் தேர்தல் காலங்களில் இதைத்தான் பிரசார பொருளாக்கி வருகின்றனவா என்று கேள்வி எழுப்பத் தோன்றுகிறது. அந்நிய சக்திகளிடமிருந்தோ அல்லது பயங்கரவாத செயற்பாடுகளிலிருந்தோ தமது மக்களை காப்பாற்றுவதென்பது ஒரு அரசாங்கத்தின் பிரதான பொறுப்பாகும். அதை சந்தர்ப்பங்கள் வரும்போதெல்லாம் சொல்லிக்கொண்டிருப்பது அந்த அரசாங்கத்துக்கு அழகா?

எனினும் இலங்கையில் இடம்பெற்ற யுத்த வெற்றியைப்பொறுத்தவரை  ஆரம்பத்தில் கூறியது போன்று சிங்கள மக்களுக்கு ஆறுதலையும் தமிழ் மக்களுக்கு ஆறாத ரணத்தையும் தந்து விட்டதொன்றாகவே அது அமைந்து விட்டது.

 ஜனாதிபதித் தேர்தலை மையமாக வைத்து  சிங்கள மக்களை உசுப்பேற்றியும் மறுபக்கம் தமிழ் மக்களின் வேதனைகளை கிளறச்செய்யும் ஒரு செயற்பாடாகவே இந்த யுத்த வெற்றி கோஷங்கள் ஒலிக்கத்தொடங்கியுள்ளன. தற்போது இலங்கையானது  இனப்பிரச்சினை, பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடிகளால் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில்  எதிர்கால இலங்கையை கட்டியெழுப்பும் நம்பிக்கை தரக்கூடிய விடயங்களை பிரதான வேட்பாளர்கள் பேசுவதை விடுத்து 30 வருட கால யுத்தத்தையும் அது முடிவடைந்த பத்து வருட கால வரலாற்றையும் பற்றி பேசிக்கொண்டிருந்தால் அது மக்களை விரக்தியடையச்செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

திசை திருப்பும் செயற்பாடுகள்

புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர் சஜித்துக்கு சிறுபான்மையினரின் ஆதரவு இருக்கும் என்று கூறப்படுகின்றது. இந்நிலையில் இறுதி யுத்தத்தை வழிநடத்தியவர் இராணுவத்தளபதியே என்ற கோத்தாபாயவின்  கருத்தை வைத்து பிரசாரம் செய்து வரும் சஜித் இறுதி யுத்த அழிவுகளுக்கும் இராணுவத்தளபதி தான் காரணமா என்ற கேள்வியை தமிழ் மக்கள் மத்தியில் முன்வைத்திருக்கிறார். அதை விட போர்க்குற்றங்கள் தொடர்பில் இராணுவத்தினர்  எச்சந்தர்ப்பத்திலும் தொடர்புபடவில்லை என்றும் தான் ஆட்சிக்கு வந்தால் பல குற்றச்சாட்டுகளுடன் சிறையில் வாடும் இராணுவத்தினரை மறுநாளே விடுவிப்பேன் என்று கூறிய கோத்தாபய இராஜபக்ச அன்றைய ஊடகவியலாளர் மாநாட்டில்  யுத்தத்தை வழிநடத்தியவர் இராணுவத்தளபதியே என்று கூறியதால்  போர்க்குற்றங்களுக்கும் இராணுவத்தினரே காரணம் என்று மறைமுகமான ஒரு செய்தியை சர்வதேசத்துக்கு அறிவித்து விட்டார் என்பது குறித்தும் சஜித்து அணியினர் தற்போது பேசி வருகின்றனர்.

அதாவது இராணுவத்தினரை பாதுகாப்பதாக கூறி வரும் அவர் மறுபக்கம் அவர்களை காட்டிக்கொடுத்து விட்டார் என்ற பிரசாரத்தையும் சஜித் அணியினர் முன்னெடுத்து வருகின்றனர். இது முற்று முழுதாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளிலிருந்து மக்களை திசை திருப்புவதற்கு ஏதுவாக அமையும்.

எனினும் கோத்தாபய என்ன அர்த்தத்தின் அடிப்படையில் இவ்விடயத்தை கூறியிருந்தாலும் மஹிந்த அணியினர் தாம் எச்சந்தர்ப்பத்திலும் யுத்த வெற்றியை விட்டுக்கொடுப்பதாக இல்லை. ஏனெனில் தமிழ் முஸ்லிம் வாக்குகள் தமக்குக் கிடைக்காது என்ற நிலையில்  சிங்கள மக்களின் வாக்குகளை பெறுவதற்கு பொது ஜன பெரமுனவிற்கு வேறு தெரிவுகள் இல்லை. அதன் காரணமாகவே யுத்த வெற்றியை பிரசாரத்துக்கு பயன்படுத்தக்கூடாது என்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுரையையும் சவாலுக்குட்படுத்தி வருகின்றனர் மஹிந்த அணியினர்.

இது இனங்களுக்கிடையேயான வெறுப்புணர்வுகளை மேலும் வளர்க்கவே வழிகோலும். தேர்தல் முடிந்த பிறகும் கூட இதன் தாக்கம் இருக்கும். ஆகவே வேட்பாளர்களை இன்னும் வலுவாக இவ்விடயத்தில் கட்டுப்படுத்த வேண்டிய ஒரு பாரிய பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது.

பொறுப்பு கூறுவதிலிருந்து நழுவும் கோத்தா

இதே வேளை அன்றைய ஊடகவியலாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த பொதுஜன பெரமுன வேட்பாளர் கோத்தாபய ராஜபக்க்ஷ நான் எதிர்காலத்தைப்பற்றியே யோசிக்கிறேன் நீங்களும் அதைப்பற்றி பேச வேண்டும் என பதில் கூறியிருந்தார். யுத்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகள் ,அழிவுகளுக்கு பொறுப்பு கூறும் விடயத்தில்  சர்வதேசத்தின் பிடியிலிருந்து  இன்னும் இலங்கை விடுபடவில்லை.  இந்த நெருக்கடிகள்   எதிர்காலத்திலும் தொடரும். எனினும் அதைப்பற்றிய கவலை இல்லாத தொனியிலேயே கோத்தாவின் பதில் அமைந்திருந்தது.

ஒரு வேளை கோத்தா ஜனாதிபதியாகி தனது கடும்போக்கை இதில் காட்டினார் என்றால் மஹிந்தவின் காலத்தை விட மிக மோசமான நிலையை இலங்கை அடையும். சர்வதேசத்திலிருந்து தனிமைபடுத்தப்படும் அபாயம் உள்ளது. ஜெனீவா ஒப்பந்தங்கள் பற்றிய கேள்விக்கு கோத்தா அது எமது அரசாங்கத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் இல்லை என நேரடியாக பதில் அளித்திருந்தார் என்பது முக்கிய விடயம்.

தேர்தல் காலங்களில் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும் வகையில் வாக்குறுதிகளையும் சிந்தனைகளையும் வழங்கி அதன் மூலம் ஆதரவை திரட்டும் எந்த வித செயற்பாடுகளிலும் பிரதான வேட்பாளர்கள் ஈடுபடுவது போன்று தெரியவில்லை. எல்லா சந்தர்ப்பங்களிலும்  இராணுவத்தினரை பாதுகாத்தல் , யுத்த வெற்றி , அந்நிய சக்திகளுக்கு அடிபணியோம் போன்ற விடயங்களே பேசப்பட்டு வருகின்றன. இது தேர்தலை நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருக்கும் மக்கள் பிரிவினருக்கு ஏமாற்றத்தை தரும் நிகழ்வுகளாகவே அமையப்போகின்றன.

சி.சி.என். நன்றி – வீரகேசரிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *