நோயை வென்று வறுமையை வென்று நிறவெறியை வென்று வெற்றியை வென்ற வித்தகி!


சாதனை சரித்திரம்: வில்மா ருடால்ஃப்

 

‘உலகின் அதிவேகப் பெண்’,‘கறுப்பு முத்து’ என்றெல்லாம் அழைக்கப்பட்டவர். மிஸ் தன்னம்பிக்கை, மிஸ் விடாமுயற்சி போன்ற பட்டங்களையும் இவருக்கே வழங்கலாம். ஒலிம்பிக் போட்டியில் 3 தங்கப் பதக்கங்கள் வென்று, ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்குத் தனி அடையாளத்தைத் தேடிக் கொடுத்தவர் வில்மா ருடால்ஃப்!

1940ம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார் வில்மா. அவரது அப்பாவுக்கு இரு மனைவியர். முதல் மனைவிக்கு 11 குழந்தைகள்… இரண்டாவது மனைவிக்குப் பிறந்த  8  குழந்தைகளில் 5வது குழந்தை வில்மா. குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தை என்பதால் மிகவும் எடை குறைந்து, நோஞ்சானாக இருந்தார். அது மட்டுமல்ல… 4 வயதில் வில்மாவை போலியோ தாக்கியது. அவரது இடது கால் செயல் இழந்தது.

குடும்பத்தின் வறுமையைப் போக்குவதற்காக வில்மாவின் அம்மா தொலைதூரத்தில் இருக்கும் ஓர் அமெரிக்கர் வீட்டில் சுத்தம் செய்யும் பணியை செய்து வந்தார். வாரம் ஒருமுறை வீட்டுக்கு வரும்போது, வில்மாவைமருத்துவரிடம் அழைத்துச் செல்வார். ‘தினமும் 4 முறை மசாஜ் செய்யவேண்டும்’ என்றார் மருத்துவர். தன்னுடைய மகன்களிடமும் மகள்களிடமும் மசாஜ் செய்யும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டுக் கிளம்பினார். அம்மா சொல்வதைத் தட்டாத குழந்தைகள், மருத்துவர் அறிவுறுத்தியதை விட அதிக முறை மசாஜ் செய்துவிட்டனர்!

8 வயதில் வில்மாவுக்கு இரும்பால் ஆன செயற்கைக்கால் பொருத்தப்பட்டது. தன்னுடைய குறைபாடு வெளியே தெரிவதும், பகல் முழுவதும் எடை மிகுந்த செயற்கைக்காலுடன் வலம் வருவதும் வில்மாவுக்குச் சிறிதும் பிடிக்கவில்லை. எப்படியாவது தன் காலை செயல்பாடு உடையதாக மாற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டார். மசாஜ் செய்த நேரம் தவிர, மீதி நேரம் முழுவதும் நடக்க முயற்சி செய்துகொண்டே இருந்தார். பள்ளியில் பயின்றும் வந்தார்.

12 வயதில் மருத்துவரை சந்திக்கச் சென்றார். அவர் செயற்கைக்காலுடன் நடந்து காட்டச் சொன்னார். வில்மாவோ செயற்கைக்காலை கழற்றிவிட்டு நடந்து காட்டினார். அனைவரும் ஆச்சரியமடைந்து போனார்கள். வில்மா குடும்பத்தினரின் உழைப்புக்குக் கிடைத்த வெற்றி இது என்று பாராட்டினார் மருத்துவர்! தினமும் ஓடி ஓடி பயிற்சி செய்தார் வில்மா. விரைவிலேயே அந்தத் தெருவில் வசித்த அவர் வயதை ஒத்த சிறுவர் களோடு போட்டிப் போட்டுக்கொண்டு ஓட ஆரம்பித்தார். ஒவ்வோர் ஓட்டத்திலும் வில்மாவே வெற்றி பெற்றார்!

அன்றையஅமெரிக்காவில் நிறவெறி அதிகமிருந்தது. பேருந்தில் ஆப்பிரிக்க அமெரிக்கர் நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டும். அவர்களுக்கான பள்ளியில்தான் படிக்க வேண்டும். இது போன்ற விஷயங்கள் எல்லாவற்றையும் கவனிக்கவும் யோசிக்கவும் ஆரம்பித்தார் வில்மா. அவரது பள்ளியில் கூட ஆப்பிரிக்க அமெரிக்கர் வரலாற்றைப் பாடமாகப் படிக்க முடிந்ததே தவிர, அடக்குமுறைகளைப் பற்றி விவாதிக்க முடியவில்லை. நிறத்தைக் காரணம் காட்டி தங்களை ஒதுக்கும் அமெரிக்கர்கள், தங்களையும் பெருமைக்குரிய அமெரிக்கர்கள் என்று நினைக்க வைக்க வேண்டும் என முடிவு செய்தார் வில்மா.

கூடைப்பந்து விளையாட்டில் பயிற்சி பெற நினைத்தார். ஆனால், வில்மாவின் அக்காவுக்கு மட்டுமே பயிற்சி பெறும் வாய்ப்பு கிடைத்தது. அப்பாவிடம் சொல்லி, தனக்கும் பயிற்சி அளிக்க வேண்டினார். வில்மாவுக்கு மட்டும் சிறிது நேரம் தனிப்பயிற்சி அளித்தார்பயிற்சியாளர். விரைவிலேயே தன் திறமையைக் காட்டினார் வில்மா. அசந்து போன பயிற்சியாளர், வில்மாவையும் அணியில் சேர்த்துக்கொண்டார். 25 போட்டிகளில் 803 புள்ளிகள் பெற்று, மாகாணத்தின் சிறந்த வீராங்கனை என்ற பெயரைப் பெற்றார் வில்மா!

எட் டிம்பிள் என்ற பயிற்சியாளர் வில்மாவின் ஓட்டத்தைக் கவனித்தார். அவருக்குத் தடகளத்தில் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார். காற்றைக் கிழித்துக்கொண்டு ஓடும் வில்மாவின் ஓட்டம் தனித்துவம் மிக்கதாகத் தெரிந்தது. பள்ளிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடியதால், ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் வில்மா.

ld3816

ஒலிம்பிக் பற்றி அப்போதுதான் முதல் முறை அறிந்துகொண்டார் வில்மா.

அவரைப் பொறுத்த வரை, ‘முதல் முறை விமானத்தில் பயணம் செய்யப் போகிறோம்’ என்பதே பரவசம் தரக்கூடியதாக இருந்தது. மெல்பர்ன் ஒலிம்பிக் போட்டியில் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பதக்கம் பெற முடியவில்லை. ஆனால், தொடர் ஓட்டப்பந்தயத்தில் வெண்கலப் பதக்கம் வென்று திரும்பினார். 16 வயதில் ஒலிம்பிக் பதக்கத்துடன் திரும்பிய வில்மாவை, பள்ளி ஆரவாரத்துடன் வரவேற்றது. மாணவர்களும் ஆசிரியர்களும் பதக்கத்தை வாங்கி பெருமிதத்துடன் பார்த்தனர். இறுதியில் வில்மா கைக்கு வந்தபோது, பதக்கம் அழுக்காகிவிட்டது.

தேய்த்துத்தேய்த்துப் பார்த்தார் வில்மா. பதக்கம் பளிச் ஆகவே இல்லை. அடுத்த முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டால், பளிச்சிடும் தங்கப் பதக்கம்தான் பெற வேண்டும் என்று எண்ணிக்கொண்டார் வில்மா!  பள்ளிப் படிப்பை முடித்த உடன், வில்மாவுக்குத் திருமணம். உடனே கர்ப்பமானார். குழந்தையை  வில்மாவின் அம்மா பார்த்துக்கொண்டார். வில்மாவைக்  கல்லூரிக்கு அனுப்பி வைத்தார். 17 மாதங்களில் அந்தத் திருமணம் முடிவுக்கு வந்தது. 2 ஆண்டுகளுக்குப் பிறகு ராபர்ட் எல்ட்ரிஜைத் திருமணம் செய்து கொண்டார். படிப்பு, பயிற்சி என்று முழு மூச்சுடன் இயங்கிக் கொண்டிருந்தார் வில்மா.

1960… ரோம் ஒலிம்பிக் போட்டிக்குத் தேர்வானார். 100 மீட்டர், 200 மீட்டர், தொடர் ஓட்டப்பந்தயம் என்று தான் கலந்து கொண்ட 3 போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களைப் பெற்றார் வில்மா. ஒரே ஒலிம்பிக்கில் 3 தங்கங்கள் பெற்ற முதல் அமெரிக்கப் பெண் என்ற சாதனையைப் படைத்திருந்தார் வில்மா. ஆண்களில் ஜெஸி ஓவன்ஸ் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கர் பல ஆண்டுகளுக்கு முன் இதே சாதனையைச் செய்திருந்தார்.  ஆப்பிரிக்க அமெரிக்கர்களை கறுப்பினம் என ஒதுக்கும் அமெரிக்கர்கள், சாதனைகளைச் செய்யும்போது மட்டும் தங்களையும் அமெரிக்கர் என்று கொண்டாடும் அரசியலையும் வில்மா கவனித்தார்.

ஐரோப்பிய நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி மேல் வெற்றி குவித்து வந்தார் வில்மா. அமெரிக்காவில் வில்மாவைக் கொண்டாட ஆரம்பித்தனர். மிகப்பெரிய புகழ் வெளிச்சம் கிடைத்தது. அதிபர்கென்னடி வில்மாவை வெள்ளை மாளிகையில் விருந்துக்கு அழைத்தார். பல்வேறு அமைப்புகள் விருது கொடுத்து கெளரவித்தன. புகழ் கிடைத்த அளவுக்கு வில்மாவுக்குப் பணம் கிடைக்கவில்லை. விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். 4 குழந்தைகளுக்குத் தாயானார். பிற்காலத்தில், ‘தான் ஏதோ ஒரு காரணத்துக் காகத்தான் இந்த உலகில் படைக்கப்பட்டிருக்கிறோம்… அதனால் சமூகத்துக்கு நல்லது செய்ய வேண்டும்’ என்று முடிவெடுத்தார். வில்மா ருடால்ஃப் அமைப்பை ஆரம்பித்து குழந்தைகளுக்கு ஒழுக்கத்தையும் விளையாட்டையும் போதித்தார். நோயை வென்று, வறுமையை வென்று, நிறவெறியை வென்ற வில்மாவால் தொண்டைப் புற்றுநோயை மட்டும் வெல்ல முடியவில்லை. 1994ல்,54 வயதிலேயே மரணத்தைத் தழுவினார் வில்மா. அவர் பிறந்த ஜூன் 23 வில்மா  தினமாக அனுசரிக்கப்படுகிறது.

 

 

நன்றி : குங்குமம் தோழி | தினகரன்Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *