பெண் போலீஸ் அதிகாரியை எரித்துக் கொன்றது ஏன்?


“பெண் போலீஸ் அதிகாரி செளமியா என்னைத் திருமணம் செய்யாமல் உதாசீனப்படுத்தியதால் பெட்ரோல் உற்றி எரித்துக் கொலை செய்தேன். பின்னர் என் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தேன்” என காவலர் அஜாஸ் வாக்குமூலம் அளித்துள்ளார்.

கேரள மாநிலம், ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரை அருகே உள்ள வள்ளிக்குந்நு காவல் நிலையத்தில் சிவில் போலீஸ் ஆபீஸராகப் பணிபுரிந்து வந்தவர் சௌமியா. இவரை ஆலுவா டிராஃபிக் காவலர் அஜாஸ் என்பவர் காரால் இடித்து, அரிவாளால் வெட்டியதுடன், பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை செய்தார்.

சௌமியா உயிர் தப்புவதற்காக அருகில் உள்ள ஒரு வீட்டுக்குள் புக முயன்றபோதும் விடாமல் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார் அஜாஸ். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் இந்தச் சம்பவம் நடந்ததால் நேரில் பார்த்தவர்கள் யாரும் இல்லை.

அஜாஸ் உடலிலும் 50 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டிருந்ததால் ஆலப்புழா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகிறார். இதற்கிடையில் செளமியாவுக்கும் அஜாஸுக்கும் காவலர் பயிற்சி காலத்திலேயே நட்பு இருந்ததாகவும்.

அஜாஸ் கடனாகக் கொடுத்த ஒன்றே கால் லட்சம் ரூபாயை திருப்பிக் கொடுத்தபோது அதைப் பெறாமல் தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி கூறியதாகவும் செளமியாவின் தாய் இந்திரா தெரிவித்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் அஜாஸ் ஆலப்புழா மாஜிஸ்திரேட்டிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதில், “செளமியா என்னைத் திருமணம் செய்யாமல் உதாசீனப்படுத்தியதால் பெட்ரோல் உற்றி எரித்துக் கொலை செய்தேன். பின்னர் என் உடலிலும் பெட்ரோல் ஊற்றி தீவைத்தேன்.

இதற்காக வாடகை கார் எடுத்துக்கொண்டு வந்தேன்” எனக் கூறியுள்ளார். அஜாஸுக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நன்றி – சிந்து ஆர்



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *