மன அழுத்தமும் இள வயது மெனோபாஸும்


பெண்ணாகப் பிறந்த எல்லோருக்கும் மாதவிலக்கு என்பது எப்படி இயல்பான ஒரு நிகழ்வோ, அப்படித்தான் மாதவிடாய் முற்றுப் பெறுகிற  மெனோபாஸும். இந்தியப் பெண்களின் சராசரி மெனோபாஸ் வயது 45 முதல் 50. ஆனால், சமீப காலத்தில் 40- ஐ நெருங்கும் பெண்களுக்கும்  மெனோபாஸ் வருவது அதிகரித்து வருகிறது. காரணம் ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தம்.

மன அழுத்தத்துக்கும், மெனோபாஸுக்குமான தொடர்பு, அறிகுறிகள், அதை உறுதி செய்கிற பரிசோதனைகள், முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் என  சகலத்தையும் பற்றிப் பேசுகிறார் மகப்பேறு மருத்துவர் ஜெயராணி.

மூளையில் உள்ள ஹைப்போதலாமஸ், பிட்யூட்டரி சுரப்பி மற்றும் சினைப்பைகள் மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. விளையாட்டு  வீராங்கனைகள், கடினமான வேலையில் இருக்கிற பெண்கள், மன அழுத்தம் அதிகமுள்ள வேலைகளிலும், டென்ஷன் அதிகமுள்ள பெரிய  பொறுப்புகளிலும் இருக்கும் பெண்களுக்கு, என்டார்ஃபின் என்கிற ஹார்மோன் சுரப்பு அதிகமாகி, அதன் பாதிப்பு மூளையில் தெரிந்து, அதன் வழியே  சினைப்பை வரை வரும்.

முதல் கட்டமாக மாதவிலக்கு சுழற்சியில் மாற்றங்கள் தெரியும். அடிக்கடி ஏற்படும் மன மாற்றம், கோபம், அழுகை, படபடப்பு, வலி, தலைசுற்றல்,  தூக்கமின்மை, மறதி, தாம்பத்ய உறவில் நாட்டமின்மை என மெனோபாஸ் வயதில் இருக்கிற பெண்கள் சந்திக்கிற அத்தனை அறிகுறிகளும்,  இவர்களுக்கும் இருக்கும். மெனோபாஸ் என்பது மாதவிலக்கு இம்சைகளில் இருந்து விடுதலை கொடுக்கிற நிகழ்வு என்றாலும், அது வேறு மாதிரியான  பிரச்னைகளையும் கொண்டு வரும்.

அதிலும் இள வயதில் மாதவிடாய் நின்று போகிற பெண்கள், மனரீதியாக பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தான், பெண்மையையே இழந்து விட்ட  மாதிரி தாழ்வு மனப்பான்மைக்குத் தள்ளப்படுகிறவர்களும் உண்டு. ஸ்ட்ரெஸ் எனப்படுகிற மன அழுத்தத்திலிருந்து விடுபடக் கற்றுக் கொள்வதே இவர்களுக்கான முதல் அட்வைஸ். மாதவிலக்கு சுழற்சியில் திடீரென மாற்றங்களை உணர்ந்தால் அலட்சியப்படுத்தாமல் மருத்துவரைப் பார்க்க வேண்டும். எஃப்.எஸ்.ஹெச் மற்றும் எல்.ஹெச் என்கிற ஹார்மோன்களின் அளவு அதிகமாக இருக்கும்.

அதே மாதிரி ஏ.எம்.ஹெச் ஹார்மோனின் அளவு குறையும். கர்ப்பப் பை சுருங்க ஆரம்பிக்கும். ஒரு எளிமையான ரத்தப் பரிசோதனையின் மூலம்  ஹார்மோன்களின் ஏற்ற, இறக்கங்களைக் கண்டுபிடித்து, அது மெனோபாஸ் தானா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.  சரிவிகித உணவு,  போதுமான உறக்கம் மற்றும் ஓய்வு, கட்டாய உடற்பயிற்சி… இந்த மூன்றும் மன அழுத்தத்திலிருந்து விடுபட அடிப்படையான தேவைகள். உடல்  பருமன் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

12 மணி நேரம், 14 மணி நேரமெல்லாம் சர்வ சாதாரணமாக வேலை பார்க்கிற பெண்கள், அதைக் குறைத்துக் கொள்ள வேண்டும். யோகா, தியானம்,  சுவாசப் பயிற்சி மாதிரியான சில விஷயங்கள், மன அழுத்தத்தை விரட்டும். மாதவிலக்கு தள்ளிப் போவது, மேலே குறிப்பிட்ட அறிகுறிகளில்  எதையாவது உணர்வது போன்றவற்றை வைத்து, மெனோபாஸாக இருக்குமோ என்கிற பயத்தில் இவற்றையெல்லாம் செய்யாமல், இள வயதிலிருந்தே  மன அழுத்தம் பாதிக்காத வாழ்க்கை முறைக்குப் பழகினால், பிரச்னைகள் வருவதில்லை…’’ என்கிறார் டாக்டர் ஜெயராணி.

 

 

நன்றி : பெண்ணியம் | ஆர்.வைதேகிLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *