சர்வதேச அகதிகள் தினம் இன்றாகும்! | 20-06-2019


ஆதரவின்றி தவிக்கும் அகதிகளுக்கு பலம், தைரியம் மற்றும் விடாமுயற்சியை அளிக்கும் விதத்தில், ஜூன் 20ஆம் திகதி ஆண்டுதோறும் சர்வதேச அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

‘அகதிகளுடன் செயல்படுங்கள்’ எனும் தொனிப்பொருளில் இம்முறை சர்வதேச அகதிகள் தினம் கொண்டாடப்படுகின்றது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர், 1950, டிசம்பர் 14 இல், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் உருவாக்கப்பட்டது.

மதக் கலவரம், இனப்போராட்டம், உள்நாட்டுப் போர், இயற்கைப் பேரழிவுகள் போன்ற காரணங்களால், தாய்நாட்டில் வாழ்வதற்கு வழி இல்லாமல், வெளியேறுபவர்களின் உரிமையை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில், ஜூன், 20ம் திகதியை உலக அகதிகள் தினமாக ஐ.நா சபை அறிவித்துள்ளது.

தற்போதைய நிலையில் ஏழு கோடி மக்கள் அகதிகளாக உள்ளனர். தினமும் 28 ஆயிரம் பேர் அகதிகளாக புலம் பெயர்ந்து வருவதாகவும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயத்தின் ஆய்வறிக்கை கூறுகிறது.

ஆபிரிக்க அகதிகள் தினம் ஜூன் 20 இல் அனுஷ்டிக்கப்படுவதால் இந்நாள் சர்வதேச அகதிகள் நாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டது.

பல்வேறு மோதல்களுக்குள் சிக்கி பிறநாடுகளுக்கு தஞ்சம் கோரி செல்லும் அகதிகள் தொடர்பான விழிப்புணர்வினை உலக மக்களிடத்தில் ஏற்படுத்துவதே இந்நாளின் முக்கிய நோக்கமாகும்.

இவ்வருட கணக்கீட்டின்படி 68.5 மில்லியன் மக்கள் தமது சொந்த இடங்களை விட்டு வெளியேறியுள்ளதுடன் அவர்களில் 25.4 மில்லியன் பேர் அகதிகளாக உள்ளதுடன், அவர்களில் அரைவாசிப் பங்கினர் 18 இற்கும் குறைந்த வயதுடையவர்கள் என அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, உலகளாவிய ரீதியில் இரண்டு செக்கன்களுக்கு ஒருவர் வீதம் இடம்பெயர்வதாகவும் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உயர்ஸ்தானிகராயலம் சுட்டிக்காட்டியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

நன்றி – vanniLeave a Reply

Your email address will not be published. Required fields are marked *