எழுத்தாளர் பாலகுமாரனுடன் ஓர் நேர்காணல் | கிருபன்


நான் கவிதை எழுத ஆரம்பிச்சபோது என் வயது இருபது. கதை எழுத ஆரம்பிச்சபோது இருபத்தெட்டு. கவிதையிலிருந்து சிறுகதைக்கு மாறும்போது அது எனக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும் அதை ஒரு சவாலாக நினைத்துத்தான் உழைத்தேன்.

இதோ நாற்பது ஆண்டுகள்ல 260 புத்தகங்கள் எழுதியிருக்கேன். இந்த ராட்சச வேகத்துக்குக் காரணம் நான் ஒரு ஒர்கஹாலிக். வேலை வெறியன். நல்லா ஒர்க் பண்றது ஒரு போதையான விஷயம். இடையறாது ஒர்க் பண்றதும் அப்படித்தான். அல்பமான விஷயங்களில் என்னால ஈடுபடவே முடியாது. உதாரணமா, எந்தப் பயனும் இல்லாம என்னால அரட்டை அடிக்கவே முடியாது. அதனால எனக்கு நண்பர்களும் கிடையாது.’ கர்ஜிக்கும் குரலில் கணீரென்று பேசிய பாலகுமாரன், ஆழத்துக்கான நேர்காணலின் மூன்று மணிநேரமும் அவரது எழுத்தைப் போலவே வசீகரத்துடன் வெளிப்படையாகப் பேசினார்.

எழுத்தை மட்டுமே நம்பி, அதையே பிரதான தொழிலாக எடுத்துக்கிட்டு சாதிச்சிருக்கீங்க. இப்படியான துணிச்சலை எது உங்களுக்குத் தந்தது?

அந்தத் துணிச்சல் என் இரண்டு மனைவிகளால் வந்தது. அவர்கள் இருவரும் அரசாங்க வேலைகளில் இருந்ததால், எனக்கு டிராக்டர் கம்பெனி வேலை பிடிக்காததால், நிறைய எழுத வேண்டும்னு ஆசைப்பட்டதால் என் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர எழுத்தாளன் ஆனேன். மூணு வேளை மோர் சாதத்துக்கு மனைவிகளின் வருமானம் உத்திரவாதம் தந்ததால்தான் இது சாத்தியமானது.

தமிழ் சினிமா வசனகர்த்தாவாக உங்க பங்களிப்பு நிறைவா இருக்கா?

ஒரு வசனகர்த்தாவுக்குத் திரைக்கதை அமைப்பதில் மிகப் பெரிய பங்கு உள்ளது. ஸீன் சொல்லணும். ஸீன் சொல்லத் தெரியாதவன் வசனகர்த்தாவா இருக்க முடியாது. ஆனா ஸீன்களை வசனகர்த்தா சொல்கிறான்ங்கிற உண்மை வெளியில தெரியாது. திரைக்கதைன்ற பேர்ல டைரக்டர் தன் பேர்ல போட்டுக்குவாரு. இது சினிமாவுலகின் எழுதப்படாத விதி. என்னை வசனகர்த்தாவாக அழைக்க வருபவர்கள் ‘பாலகுமாரன் நல்லா ஸீன் சொல்லுவாரு’னு நம்பிதான் வருவாங்க. அந்த நம்பிக்கையை நான் எப்பவும் நிறைவேத்தி வந்திருக்கேன்.

எழுத்தாளன் உள்பட ஒரு வெற்றிகரமான கலைஞனுக்குக் காமமும், ஈகோவும்தான் உந்துவிசையா இருக்கும்ங்கிறது உலகளாவிய கருத்து. உங்களுக்கும் அப்படித்தானா?

இது உலகளாவிய கருத்து என்னும்போது இதிலிருந்து பாலகுமாரன் மட்டும் எப்படித் தப்பிக்க முடியும்? ஜாக்கிரதையாகக் கையாளவில்லை என்றால் தன்னையே பதம் பார்த்துவிடும் பிடி யில்லாத கத்திதான் காமம். எழுத்தில் காமத்தை ஜாக்கிரதையா இறக்கலேன்னா, ‘சீ… தூ…’னு சொல்லிடுவாங்க. அப்படி ‘சீ… தூ…’ சொல்றவங்கதான் உண்மையில காம வசப்பட்டவங்களாகவும் இருப்பாங்க. அவங்க என்ன நினைச்சு திட்டுவாங்கன்னா, ‘நான் ஏற்கெனவே இரண்டுங்கெட்டானா இருக்கேன். இந்தக் கர்மம் பிடிச்சவன் இதை வேற எழுதி நம்ம காமத்தைத் தூண்டித் தொலையறான்’ என்கிற கோபத்தினாலதான்.

அவசியமா இருக்குமானால், மனசைப் பக்குவப்படுத்துவதாக இருக்குமானால் காமத்தை எழுதலாம். மற்றபடி சுயமைதுனத்துக்காக எழுதுவது தவறு. காமத்தின் உந்துதலால் அப்படி எழுதுவது மிகப் பெரிய பிழை. காமம் ஒரு அழகான விஷயம். ஒரு மருந்து. ஒரு அமிர்தம். அதைத் தலையில கொட்டிக்குவாளா? ரெண்டு ஸ்பூன் சாப்பிட்டு வெச்சிடணும்.

அடுத்து ஈகோ பத்திக் கேட்டீங்க. ஈகோங்கிறது புல், புழு எல்லாத்துக்கும் இருக்கு. பாலகுமாரனுக்கும் இருக்கு. அந்த ஈகோ… உங்க முடியைப் பிடிச்சு இழுக்காது. உங்க கன்னத்துல பளார்னு அறையாது.

நாளாக ஆக, எழுத எழுத, அந்த ஈகோவும் மெல்லக் குறைந்துபோகும். என் புத்தகத்தை நானே கொண்டாடிக் கொள்ள மாட்டேன். எனக்கு நானே விழா எடுக்க மாட்டேன். எனக்கு நானே போஸ்டர் அடித்துக்கொள்ள மாட்டேன். 260 புத்தகங்கள் எழுதியிருந்தாலும், ஒரே ஒருமுறைதான் வெளியீட்டு விழா நடந்திருக்கிறது.

காதலுக்கும் காமத்துக்கும் வித்தியாசம் என்ன?

காதல் என்பதில் காமம் இருப்பினும், காமம் என்பதில் காதலே இல்லை. எதை அன்புடன் நடத்துகிறோமோ, எங்கு மரியாதை காட்டுகிறோமோ, அங்கிருந்துதான் அன்பும் மரியாதையும் திரும்பக் கிடைக்கும்.

அந்த அன்புக்கும், மரியாதைக்கும் காதல் என்று பெயர். அந்தக் காதல் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள காமம் என்ற விஷயத்தைப் பயன்படுத்திக்கொள்கிறது. அப்போது காதல் பரிபூரணமாகிறது. இன்னும் பெரிதாக மலர்ச்சியடைகிறது.

ஒருவர் தன் காதலைக் கவிதை மூலம் சொல்வதைவிட, கதை மூலம் சொல்வதைவிட, காமத்தின் மூலம் சொல்வதில் சந்துஷ்டி இருக்கிறது. நிறைவு இருக்கிறது.

காதலைச் சொல்ல காமம் ஒரு உபாயம் அவ்வளவே.

‘எழுத்தாளர்களால் சினிமாவில் ஜெயிக்க முடியாது’ என்ற பிம்பத்தை உடைச்சு, ஒரு வசனகர்த்தாவா ஜெயிச்சு வந்த முதல் எழுத்தாளர் நீங்க. கடந்த இருபதாண்டுகள்ல தமிழ் சினிமா, எழுத்தாளர்களை உரிய முறைல பயன்படுத்தியிருக்கா?

உங்க பாராட்டுக்கு நன்றி. டைட்டில் கார்டில் ‘வசனம் – பாலகுமாரன்’னு வரும்போது கைதட்டல் என்பது முதல்ல எனக்குதான் கிடைச்சது! அதுக்கு முன்னாடி யாருக்காவது கிடைச்சதானு எனக்குச் சந்தேகம். முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு அது கிடைச்சிருக்கலாம். அதற்கு அவரது வசனங்கள் மட்டுமல்லாது வேறு காரணங்களும் இருக்கலாம்.

நாவல் வேறு; சினிமா வேறு. சமீபத்தில் ஒரு பெரிய டைரக்டரின் படம் படுதோல்வியைக் கண்டது. ஒரு நாவல் எழுதியவருக்கு, அதற்குத் திரைக்கதை, வசனம் எழுதியபோது அதை அமைக்கத் தெரியவில்லை. அதுல நல்ல ஸீன் இல்ல. என்ன சொல்ல ணும் என்ன சொல்லக் கூடாதுனு அவருக்குத் தெரியல. நாவலில் சொல்லப்பட வேண்டிய எல்லா விஷயமும் சினிமாவில் சொல்லப்பட வேண்டியதில்லை.

நான் நாவலைத் தோளில் வைத்துக்கொண்டு சினிமாவில் இறங்கவேயில்லை. நாவலை வீட்டில் வெச்சிட்டு சினிமா ஆளாதான் போனேன். விஷுவல் மீடியாவுக்கு என்ன காண்பிச்சா ரசிக்கிற மாதிரி இருக்கும்னுதான் எழுத்தாளர் யோசிக் கணும்.

வசனங்கள் குறைவாகவும், செயல்கள் அதிகமாகவும் திரைக்கதை – வசனம் இருக்க வேண்டும்.

‘இது நம்ம ஆளு’ படத்துல பாக்யராஜுக்கு அசிஸ்டெண்ட் டைரக்டரா பணியாற்றின அனுபவம் பத்தி…?

அந்த நேரத்தில் பாக்யராஜ் மிக உயரத்தில் இருந்தார். ‘வருங்கால முதலமைச்சர் வாழ்க’னு கோஷம் போட அவருக்கு ஒரு கூட்டம் இருந்தது. கனமான எம்.எல்.ஏ.க்கள் அவருக்கு அருகில் இருந்தார்கள். அந்த ஈகோ அவருகிட்ட இருந்தது. அவ்ளோ பெரிய ஈகோவை, அவ்ளோ பெரிய ஆளை என்னால சுமக்கவே முடியல. அவரைக் கையாள்வதற்கு என் வெகுளித்தனம் உதவியாக இல்லை. அவருக்கு எல்லாம் தெரிந்திருந்தது. சூட்சுமமானவர். தந்திரம் மிக்கவர். கெட்டிக்காரர். நல்ல படைப்பாளி. அவர் இழுத்த இழுப்புக்கெல்லாம் நான் போக வேண்டிவந்தது. அதனால் எங்களுக்குள் மோதல் ஆரம்பித்தது.

நான் அவரிடம் சேராமல் இருந்திருக்க வேண்டும். எனக்கு வசப்பட்ட இளைஞர்களுடன் சேர்ந்து (டைரக்ஷனில்) நுழைந்து என்னை நிரூபித்திருக்க வேண்டும்.

பாக்யராஜ் மூலம் என் ஈகோக்கள் உடைபட்டன. ஒரு மனச் சிதைவே எனக்கு ஏற்பட்டது. அவரது நடவடிக்கைகளால் நான் ரொம்பத் துவண்டுபோனேன். அவரிடம் சேர்ந்தது என் தப்பு. ஆவலாதி. பேராசை. முன்னாடியே டைரக்டர், நண்பர் பார்த்திபன் என்னை வார்ன் பண்ணாரு. ‘அவருகிட்ட (பாக்யராஜிடம்) சேராத. அவரைப் பத்தி உனக்குத் தெரியாது. உன்னைத் தூக்கிச் சாப்டுருவாரு’னு சொன்னாரு. ‘நான் நல்லாயிருக்கறது உனக்குப் புடிக்கலையா’னு சொல்லி பார்த்திபனை நான் மறு தலித்தேன். அதன் பலனை அனுபவித்தேன்.

தனியா படம் டைரக்ட் பண்ணணுங்கிற கனவு உங்களுக்கு இருந்ததா?

முன்னே இருந்தது. இப்ப இல்ல. இப்பல்லாம் சினிமா பார்க்கிறதும் இல்ல. சினிமா பத்திப் பேசறதும். இல்ல. இப்போது என் வேலை எழுத்து மட்டுமே.

‘விஸ்வரூபம்’ படத்துக்கு நேரிட்ட சிக்கல்கள் பற்றி அறிந்தபோது ஒரு படைப்பாளியாக நீங்கள் என்ன நினைத்தீர்கள்?

இந்த தேசத்தில் கலைஞனுக்குப் பேச்சு சுதந்திரம் இல்லையெனில், இந்த தேசத்தில் மதவாதிகள்தான் மிக முக்கியம் எனில், ஒவ்வொரு சினிமாவுக்கும் மதவாதிகள்தான் இரண்டாவது சென்ஸார் சர்டிஃபிகேட் தர வேண்டுமெனில் இங்கே சினிமா, நாடகம், எழுத்து எதுவும் வராது.   விஸ்வரூபம் படத்தில் கமல்ஹாசன் அப்படி என்ன சொல்லிட்டாரு? ‘தாலிபான்’னு ஒரு புத்தகம் தமிழில் வெளிவந்திருக்கு. எவ்வளவு மோசமான, எவ்வளவு கொடூரமான கூட்டம் தாலிபான்கள் என்பது அதில் தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. தாலிபான்களை ஆதரித்து எந்தப் பக்கத்து முஸ்லிம்கள் பேசினாலும் அது அபத்தம் என்பது என் அபிப்ராயம்.

உங்கள் படைப்புகளில் காலம் தாண்டி நின்று நிலைக்கக் கூடியதாக எதைக் கருதுகிறீர்கள்?

காலத்தைத் தாண்டி நிற்பதும், அப்படி நிற்காமல் போவதும் அந்தந்தப் படைப்பின் பலம், பலவீனத்தைப் பொறுத்தது. அதை நான் ஆராய்ச்சி செய்வதில்லை. அதுபற்றி எனக்குக் கவலையில்லை. ஏனென்றால் என் அடுத்தடுத்த படைப்புகளை நோக்கி நான் நகர்ந்துகொண்டிருக்கிறேன்.

உங்க வழக்கமான படைப்புகள்ல இருந்து மாறுபட்டு இப்ப ‘உடையார்’ என்கிற சரித்திர நாவல் எழுதியிருக்கீங்க. இந்தச் சரித்திர நாட்டம் புதிதாக ஏற்பட்டதா?

என் 16 வயதில் தஞ்சை பெரிய கோயிலைப் பார்த்தபோது ஏற்பட்ட திகைப்பு இன்றளவும் இருக்கிறது! சுரணை உள்ள எல்லா மனிதருக்கும் சரித்திரம் மிக முக்கியமென்று படும். எந்தப் பாரம்பர்யத்திலிருந்து வந்தோம்? யார் முன்னோர்? என் மொழியின் பலம் என்ன? பலவீனம் என்ன என்பதை மிகத் தெளிவாகத் தெரிந்துகொள்கிறபோது, சரித்திரம் மிகப் பெரிதாக விரிவடைகிறது.

அந்தக் கோயிலின் விமானத்தில் ஒரு நூல் பிசகினாலும் கோணலாகியிருக்கும். கல்லில் ஒரு நூலிழைகூட பிசகாமல் செதுக்கியிருக்கிற அந்த நித்ய விநோத பெருந்தச்சனை, குஞ்சரமல்லனை விழுந்து சேவிக்கத் தோன்றுகிறது. அவனைச் சீர்தூக்கி அமைத்த மன்னன் ராஜராஜனைக் கொண்டாடத் தோன்றுகிறது. அதனால் எழுந்ததுதான் உடையார்.

அது ஒரு மன்னனின் கதை அல்ல. ஒரு தேசத்தின் கதை. ஒரு நதி தீரத்தின் நாகரிகம். தமிழ் மக்கள் அதை இருகரம் நீட்டி வாங்கிக்கொண்டார்கள். இவ்வளவு பெரிய விஷயமா? இத்தனை அழகா நம்மிடம் இருக்கிறது என்று வியக்கிறார்கள். ‘உடையார்’ படித்துவிட்டு குடும்பத்துடன் தஞ்சை பெரிய கோயிலைச் சுற்றிவந்த தமிழர்கள் ஏராளம்! ஏராளம்!

யோகி ராம்சுரத்குமார் உங்களில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன?

யோகி ராம்சுரத்குமார் கடவுள் அம்சம் நிறைந்த ஒரு சித்த புருஷர். தன்னுள் கடவுளின் இருப்பை முற்றிலும் உணர்ந்து தெளிவாக வெளிப்படுத்திக் கொண்டவர். அவருடைய அண்மை, எனக்கும் என்னுள் இருக்கும் சக்தியை உணரக் கூடிய வாய்ப்பைத் தந்தது. ஆத்ம தரிசனத்தைக் காட்டியது.

புலி, புலிக்குட்டியை நக்கித்தான் புலியாக்கும். நான் புலியால் ஆசீர்வதிக்கப்பட்டவன். அவர் மிக ஆழமாக என்னுள் தன்னைச் செலுத்தினார். அது எழுதி மாளாத விஷயம். சொற்களுக்கு அப்பாற்பட்ட ஒரு சந்தோஷம், ஒரு சுகம், ஒரு விடுதலை அது!

 

நன்றி : கிருபன் | யாழ்.காம்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *