கவிதை | அவள் ஒரு கவன இசை | த. செல்வா


 

அன்பே நான் பயணப் படுகையில்
‘கவனமாய் பார்த்து வா’ என்கிறாய்
கவனம் என்ற சொல்லில்தான் வாழ்வின் ஆயுள் சுழல் வதை அறிவேன் நான்
கவனத்தைச் சூடுதல் சுகங்களின் தொடக்கம்
கவனத்துக்கும் நமக்கும் கவனம் பற்றிய தவிப்புக்கள் ஏராளம்

கவனமா படி
கவனமா போ
கவனமா எழுது
கவனமா செய்
கவனமா இரு
என கவனம் பற்றி விரியும் குரல்கள் அதிகம்

எனது நினைவுகளை உன்னுள்
ஆடையாக்கி அணிந்தவளே
அம்மாவின் பின்னான அம்மா நீயென்பேன்
விதிகளின் முன்தோன்றும்
மதி நீ என்பேன்

நிலவுக்கு வானம் போல்
நீருக்கு நிலம் போல்
எனக்கு நீயென சிறகு விரிக்கிறேன்

ஆகாயம் போல் விரிந்திட்ட பிரபஞ்சத் தோட்டமெங்கும்
எத்தனை மலர்கள்
எதுவும் உன்னைப் போல் சுகந்தமில்லைக் கண்ணே!

பள்ளியில் கவனமாய் படி என்பது போல்
மைதானத்தில் கவனமாய் ஓடு என்பது போல்
பரீட்சையில் கவனமாய் எழுது என்பது போல்
என்னுள் ஓராயிரம் கவனங்களை விதைக்கிறாய்

கவனத்தை கவனமாய் வைத்திரு
நாளை நமக்கோர் மகன் பிறப்பான்
அவனுக்கும் கவனம் பற்றிய பாடல்களை சொல்லிக் கொடக்க
நாளை நமக்கோர் மகள் பிறப்பாள்
அவளுக்கும் கவனம் பற்றி பாடிக்காட்ட
நாளை நமக்கோர் நிலமிருக்கும்
அங்கே கவன வாசகங்களை எழுதி வைக்க

த. செல்வா

6.23பி.ப.28.06.2020Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *