பள்ளிக்கூடங்கள்  கட்டடங்களால் மாத்திரம் ஆனவையல்ல?: கவிஞர் தீபச்செல்வன்


நான் கல்வி கற்றகாலத்தில் மாத்திரமல்ல, இன்றைக்கு கல்வி கற்பிக்கும் காலத்தில்கூட படிக்க முடியாமல் இடைஞ்சலுகின்ற மாணவர்களை திட்டுகி தண்டிக்கிற ஆசிரியர்களைப் பார்த்தே வருகிறேன். பள்ளிக்கூடம் என்பது கல்வியில் சிறந்த மாணவர்களுக்கு மாத்திரமல்ல. கற்க முடியாமல் மெல்ல நகருகின்ற மாணவர்களுக்கும் உரியதுதான். ஒரு ஆசிரியராக பாடசாலைக்குள் நுழைகின்ற போது நிறையப் பாடங்களைக் கற்க முடிகிறது.

கொரேனா பேரிடர் காலத்தில் முடப்பட்ட பாடசாலைகள் எப்போது திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தது ஈழக் கல்விச் சமூகம். எதிர்வரும் 29ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அதிபர்கள், ஆசிரியர்கள் முதல் பெற்றோர்கள் வரை கொரோனாவால் பிள்ளைகளின் கல்வி பாழாகிறது என்ற கலக்கில் இருந்தனர். ஏற்கனவே வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்தங்கிய நிலையில் உள்ளன. இந்தக் கொரோனா காலம் இன்னமும் வடக்கு கிழக்கை பின்னுக்கு தள்ளப் போகின்றன என்பதே அந்த அதிர்ச்சிக்குக் காரணமாகும்.

போர்க்காலத்தில் இல்லாதளவுக்கு வடக்கு கிழக்கில் கல்வி பெரும் வீழ்ச்சியை சந்திருக்கிறது. போர்க்காலம் என்பது மாணவர்களை சுற்றியும் அவர்களின் கல்வியை குறித்தும் கடும் போரை நடத்தியவொரு காலம். உண்பதற்கு உணவில்லை. அரசின் கடுமையான பொருளாதாரத் தடையால் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தவித்தன. வெறும் வயிற்றுடன் இலைக் கஞ்சியை நம்பி மாணவர்கள் பள்ளிக்குச் சென்றனர்.

மின்சாரத்தை தெரியாத காலமும் அதுதான். சில நகரங்களில் புலிகளின் மின் உற்பத்தி நிறுவனங்கள் மின்சாரத்தை வழங்கியிருந்தன. கிராமங்களில் மிகச் சிறியளவிலான விளக்குகள்தான் பயன்பாட்டில் இருந்தன. இருட்டுக்குள் புத்தகங்களை விரித்து கண்ணை அகல விரித்து படித்து எழுதினர் மாணவர்கள். அதைப் போல வீடுகள் என்பதே தரப்பால்களாலும் ஓலைகளினாலும் ஆன கூடாரங்கள்தான். ஆனாலும் அங்கு மாணவர்கள் நன்றாகப் படித்தனர்.

எப்போதும் தமிழரின் வானத்தை விமானங்கள் உழுது கொண்டிருக்கும். பாடசாலைகள் எனப்பட்டவை, பதுங்குகுழிகளால் ஆகியிருந்தது. பாடசாலை மணியைப் போல அடிக்கடி விமானங்கள் வந்து வானத்தை கிழிக்கும். பிள்ளைகளை பதுங்குகுழிக்குள் பத்திரமாக இருக்கச் செய்துவிட்டு ஆசிரியர்கள் வெளியில் நிற்பர். நாள் முழுவதும் விமானங்கள் வந்து படிப்பை குழப்பிச் செல்லும். சிலவேளை பள்ளிகள் மீது குண்டுகளைப் போடும்.

நாகர் கோவில் பள்ளி மாணவர் படுகொலையை எந்த தமிழராலும் மறக்க இயலாது. பள்ளி சென்ற பிள்ளைகள் வழியில் கிளைமோரிலும் பலியாகினர். மன்னாரின் பள்ளிப் பேருந்து மீது 2006இல் நடந்த கிளைமோர் தாக்குதலில் மாணவர்கள் பலிகொள்ளப்பட்டனர். செஞ்சோலையில் 54 பள்ளி மாணவர்கள் பலிகொள்ளப்பட்டனர். மாணவர்களின் வெள்ளைச் சீருடைகள் குருதியால் நனைந்தது. பள்ளிக்கூடங்களும் வகுப்பறைகளும் சிதறின.

ஆனாலும் அன்றைக்கு கல்வி சித்தி விகிதம் என்பது உயர்வாகவே இருந்தது. போர் நடந்த காலத்தில் 72 வீதத்திற்கு குறையாத சித்தியை வடக்கு கிழக்கு மாகாணங்கள் வகித்தன. கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களுடன் திருகோணமலை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் என தமிழர்கள் வாழும் மாவட்டங்களின் பெறுபேறுகள் கொழும்புக்கு சவால் விட்டன. அகில இலங்கை ரீதியாக மாணவர்கள் முன்னிலை இடத்தை பெறுவதை அப்போது ஒரு அதிசயமாகவே பார்த்தனர்.

கடும் போர், பொருளாதாரத் தடை, பள்ளிகளின் இடப்பெயர்வு என இனவழிப்பு யுத்தம் கூறுபோட்ட காலத்திலும் கல்வியில் உயர்ந்திருந்தோம். மாணவர்களின் சாதனை பெரிதாய் இருந்தது. இன்றைக்கு ஏன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் கல்வியில் பின்னடைவை சந்திக்கின்றன என்று கல்வியாளர்கள் ஆராய்ச்சிகளை செய்து கொண்டிருக்கிறார்கள். போர் முடிந்து கடந்த பத்தாண்டுகளாக இந்த நிலைதான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

கடந்த முறை வெளியான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறும் பெரும் வீழ்ச்சியை காட்டியிருந்தன. உயர்தரம் கற்கும் தகைமையை 67. 74 வீதமான மாணவர்கள் வடக்கு மாகாணத்தில் பெற்றிருந்தனர். கணிதம் மற்றும் தாய்மொழி உட்பட ஆறு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் (3C) அடிப்படையிலும் ஒன்பதாவது (60.80%) நிலையில்தான் வடக்கு மாகாணம் இருக்கிறது.  ஆனால் சகல படங்களிலும் சித்தியடைய தவறியவர்கள் (all F) அடிப்படையில் இலங்கையில் 3 ஆவது நிலையில் (2.63%) உள்ளது வடக்கு.

வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களான மன்னார் 74.67%யும்,  யாழ்ப்பாணம் 74.16%யும், வவுனியா 67.70%யும், முல்லைத்தீவு 63.07%யும், கிளிநொச்சி 60.51%யும் சித்தி விகிதங்களை அடைந்திருக்கின்றன. அத்துடன் அகில இலங்கை ரீதியாக முல்லைத்தீவு 24ஆவது மாவட்டமாகவும் கிளிநொச்சி 25ஆவது மாவட்டமாகவும் நிலையை பெற்றுள்ளன. கிளிநொச்சி மாவட்டம் தொடர்ந்து கல்வியில் பின்நிலையில் நிற்கிறது.

கிழக்கு மாகாணம் சாதாரண தரப் பரீட்சையில் எட்டாவது இடத்தை அடைந்திருக்கிறது. அத்துடன் கடந்த ஆண்டு நடந்த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின்படி, கிழக்கு மாகாணம் நான்காவது இடத்தைப் பெற்று முன்நோக்கி நகர்ந்திருக்கிறது. தமது மாகாணம் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருவதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் கூறுகின்றார். வடக்குடன் ஒப்பிடுகின்ற போது கிழக்கு முன்னோக்கிச் சென்றாலும் அகில இலங்கை ரீதியான அதன் அடைவு இன்னமும் உயர வேண்டியுள்ளது.

விடுதலைப் புலிகளின் காலத்தில், மிகக் கடும்போர் நடந்த காலத்தில் இல்லாத வசதிகள் வாய்ப்புக்கள் எல்லாம் இப்போது பள்ளிக்கூடங்களுக்கு வந்துவிட்டன. போதிய கட்டிடங்கள், போதிய ஆசிரியர் வளம், ஆய்வுகூடங்கள், தொலைபேசி மற்றும் இணையக்கூடங்கள், சிமார்ட் வகுப்பறைகள் என மிகுந்த நவீனச் சூழலில் பள்ளிகள் இயங்குகின்றன. போக்குவரத்து வசதிகள், கல்விக்கான நவீன வாய்ப்புக்கள் யாவும் அதிகரித்துவிட்டன. ஆனாலும் ஏன் பின்னடைவை சந்திக்கிறோம்?

போர்காலத்தில் இருந்த உயர்வை ஏன் எட்டமுடியவில்லை? பள்ளிக்கூடங்கள் வெறுமனே கட்டடங்களால் ஆனதல்ல! அப்படி கட்டடங்களாலும் வசதிகளினாலும் ஆனது என்றால் இப்போது வீழ்ச்சியும் அப்போது உயர்ச்சியையும் பெற்றிருக்க முடியாது. அன்றைக்கு வடக்கு கிழக்கின் கல்வியை உயர்த்தியதில், தமிழீழ மாணவர் அமைப்பு, தமிழீழக் கல்விக் கழகத்தின் பங்களிப்பு பெரும் வகிபாகத்தை ஆற்றியது. புலிகளின் நிர்வாகத்திறன் கல்வியை உயர்த்துவதில் பெரும் பங்கை வகித்தது.

ஆசிரியர் வளமற்ற பள்ளிகளுக்கு புலிகளின் கல்விக் கழகம், ஆசிரியர்களை நியமித்து அவர்களுக்கு ஊதியம் வழங்கியது. ஆசிரியர்களுக்கு பயிற்சிகளும் தேவையான விரிவுரைகளும் நடாத்தப்பட்டன. கடுமையான கண்காணிப்பும் பொறுப்பான கடமையாற்றலும் அன்று இருந்தது. கல்விச் சமூகம் கொள்ள வேண்டிய விழிப்பையும் கொண்டிருந்த பொறுப்பையும் சொல்லிக் கொடுத்து மிகுந்த விழிப்புடன் இருந்தது கல்விச் சமூகம்.

இன்றைக்கு கல்வியை குழப்பும் சூழல்தான் மிகுந்திருக்கிறது. இராணுவச் சூழல், பள்ளிகளை இலக்கு வைத்து போதைப் பொருள் வியாபாரம், போரால் தாய் தந்தையை இழந்த குழந்தைகளின் கல்விப் பின்னடைவு, மற்றும் கல்வி இடைவிலகல், கவனத்தை குறைக்கும் கருவிகளின் ஆதிக்கம் என இன்றைக்கு கல்விக்கு உவப்பற்ற சூழல்தான் வடக்கு கிழக்கில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

தமிழர்கள் கல்வியால் ஈழத் தீவில் மாத்திரமின்றி உலகளவில் அறியப்பட்டவர்கள். ஈழத்தவர்கள் படித்த சமூகத்தினர் என்றே அறியப்பட்டனர். அவர்களின் கல்விமீது அரசாங்கம் அதிகாரபூர்வமாகவே தடைகளை பிரயோகித்து பின்தள்ள முயன்றது. அதிகாரபூர்வமற்ற ரீதியிலும் கல்விமீது போர் தொடுக்கப்பட்டது. இனப்பாகுபாடுகள் கல்வியில் இன்றளவில் தொடர்கின்றன. முக்கியமாக, இனப்படுகொலைக்கான நீதி, போரால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் கல்வியை உயர்த்த ஒரு மருந்தாக  அவசியமானது.

இனவழிப்பால், பாதிக்கப்பட்ட ஒரு சமூகத்தின் ஆசிரியர்களுக்கு இதில் மிகப் பெரும் பொறுப்பு இருக்கிறது. காயப்பட்ட குழந்தைகளுக்கு நாம் கல்வியை ஊட்டுகிறோம். அவர்களின் விழிகளால், அவர்களின் பார்வையில் சென்று கல்வியை கற்பித்தால்  அவர்களைவிட நாம் கற்கும் பாடங்கள்தான் அதிகமாயிருக்கும்.

கவிஞர் தீபச்செல்வன்

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *